ஏ.டி.எம். மையத்தில் திருடிய மெக்கானிக் கைது ரூ.30 லட்சம் பறிமுதல்


ஏ.டி.எம். மையத்தில் திருடிய மெக்கானிக் கைது ரூ.30 லட்சம் பறிமுதல்
x
தினத்தந்தி 13 Nov 2020 12:24 AM IST (Updated: 13 Nov 2020 12:24 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் ஏ.டி.எம். மையத்தில் திருடிய மெக்கானிக் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து ரூ.30 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

பெங்களூரு, 

பெங்களூருவில் உள்ள தனியார் பாதுகாப்பு நிறுவனத்தில் மெக்கானிக்காக வினய் ஜோகி என்பவர் வேலை பார்த்து வந்தார். அந்த தனியார் நிறுவனத்தினர், பேடரஹள்ளியில் உள்ள ஏ.டி.எம். எந்திரத்தை பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த பணியை மேற்கொள்ளும் பொறுப்பை வினய் ஜோகிக்கு நிறுவனம் வழங்கி இருந்தது. இந்த நிலையில், ஏ.டி.எம். எந்திரத்தை சரி செய்ய சென்ற வினய் ஜோகி, கடந்த ஆகஸ்டு மாதம் 24-ந் தேதி ரூ.50 லட்சத்தை திருடி சென்று விட்டார்.

இதுகுறித்து பேடரஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாகி விட்ட வினய் ஜோகியை வலைவீசி தேடிவந்தனர். ஆனால் அவர் போலீசாரிடம் சிக்காமல் தலைமறைவாகி இருந்தார்.

மெக்கானிக் கைது

இந்த நிலையில், தலைமறைவாக இருந்த வினய் ஜோகியை பேடரஹள்ளி போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணையில், அவருக்கு ஏராளமான கடன் இருந்ததாகவும், அந்த கடனை அடைக்க ஏ.டி.எம். மையத்தில் இருந்து பணத்தை திருடி சென்றதும் தெரியவந்தது. அதில், ரூ.11 லட்சத்தை வங்கியில் வாங்கி இருந்த கடனை அவர் செலுத்தி இருந்தார். ரூ.14½ லட்சத்தை தனது பெற்றோரிடம் கொடுத்துவிட்டு மீதி பணத்தை அவர் ஆடம்பரமாக செலவு செய்தது தெரியவந்தது.

வினய் ஜோகியிடம் இருந்து ரூ.30 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. மீதி பணத்தை மீட்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.கைதான வினய் ஜோகி மீது பேடரஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Next Story