பசுமை பட்டாசு என்றால் என்ன? கர்நாடக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி


பசுமை பட்டாசு என்றால் என்ன? கர்நாடக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி
x
தினத்தந்தி 13 Nov 2020 12:54 AM IST (Updated: 13 Nov 2020 12:54 AM IST)
t-max-icont-min-icon

பசுமை பட்டாசு என்றால் என்ன? என்று கர்நாடக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.

பெங்களூரு,

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நாளை (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையில் மக்கள் பட்டாசு வெடித்து மகிழ்வது முக்கிய நிகழ்வாகும். கர்நாடகத்தில் கொரோனா பரவி வரும் நிலையில் பட்டாசு வெடிக்க தடை விதிப்பதாக முதல்-மந்திரி எடியூரப்பா ஏற்கனவே அறிவித்தார். இதற்கு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, பசுமை பட்டாசு மட்டும் வெடிக்க அனுமதி வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் கர்நாடக ஐகோர்ட்டில், அனைத்து வகை பட்டாசுகளையும் வெடிக்க தடை விதிக்க கோரி பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனு ஐகோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “பசுமை பட்டாசு வெடிக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. பசுமை பட்டாசு என்றால் என்ன? என்பதை அரசு விளக்கியுள்ளதா?. பசுமை பட்டாசு என்றால் என்ன என்பதை மக்களே முடிவு செய்துகொள்ள வேண்டுமா?. அரசு இவ்வாறு உத்தரவிட்டு இருப்பது சரியல்ல. பட்டாசுகளை வெடிப்பதால் காற்று மாசு அடைகிறது. இந்த மாசுபாட்டை தடுக்க மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் என்ன நடவடிக்கை எடுக்கிறது“ என்றனர்.

விளக்கம்

இதுகுறித்து கர்நாடக அரசு நாளை (அதாவது இன்று) விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், காற்று மாசு அடைவதை தடுப்பது குறித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் தனது நிலையை தெரியப்படுத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Next Story