நேரத்தை வீணடிக்காமல் கூடுதல் திறன்களை மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் - வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் பேச்சு
நேரத்தை வீணடிக்காமல் கூடுதல் திறன்களை மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று கோவை வேளாண் பல்கலைக் கழக துணைவேந்தர் குமார் பேசினார்.
அன்னவாசல்,
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரி, புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலையில் உள்ளது. இந்த கல்லூரியின் செயல்பாடுகளை ஆய்வு செய்யவும், கல்லூரிகளை திறக்கும் பட்சத்தில் செய்யப்பட வேண்டிய பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை கூறவும், கோவை வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் குமார் கல்லூரிக்கு வருகை தந்தார். பின்னர் அவர் கல்லூரியில் உள்ள பல்வேறு இடங்களுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அவர், கல்லூரி வளாகத்தில் 5 ஏக்கர் நிலப்பரப்பில் தானியங்கி சொட்டு நீர்ப்பாசனம் மூலம் உளுந்து உள்ளிட்ட பயறு வகைகளை பயிரிட்டு, மாதிரி பண்ணையினை அமைக்க வேண்டும். இதனை பார்வையிடும் விவசாயிகள் ஊக்கம்பெறும் வகையில் மாதிரி மற்றும் செயல் விளக்கமளிக்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும்.
மானாவரி மற்றும் தரிசு நிலங்களை மேம்படுத்தவும், மிக குறைந்த அளவிலான நிலங்களை கொண்டிருக்கும் விவசாயிகளின் நலத்தினை கருத்தில் கொண்டும், சந்தை மதிப்புமிக்க, பலா, கொடுக்காபுளி, வில்வம், சீமை இலந்தை உள்ளிட்ட உள்ளூர் மரங்களை தேர்வு செய்து அடர்நடவு முறையில் குறுக்காடுகளை முன்மாதிரியாக அமைக்க வேண்டும்.
வளாகத்தில் உள்ள கழிவு நீரினை சுத்திகரித்து, அதனை பயன்படுத்தி தீவனப் பயிர்களை வளர்க்கவும், ஆடு, மாடு, கோழி மற்றும் பன்றி போன்றவைகளை வளர்த்து, விவசாயிகளின் வருவாயினை இரட்டிப்பாக்க உகந்த வழிகளை செயல்படுத்த வேண்டும் என ஆலோசனை கூறினார்.
அதனைத்தொடர்ந்து கல்லூரி மாணவர்களுடன் காணொலி காட்சி வாயிலாக துணைவேந்தர் பேசியதாவது:-
உழவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களுக்கு தீர்வு கண்டு, அவர்களின் வாழ்வினை மேம்படுத்துவதுடன், ஒட்டுமொத்த சமூகத்திற்கான பங்களிப்பினை வழங்க வேண்டும். இந்த ஆண்டு, மத்திய அரசால் நடத்தப்பெற்ற இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் உயர்கல்விக்கான நுழைவுத்தேர்வில் பல்கலைக்கழகத்திலிருந்து 185 மாணவர்கள் தேர்வு பெற்று, கல்வி உதவித்தொகையுடன் உயர்கல்வி கற்கும் வாய்ப்பினை பெற்றுள்ளனர். அவர்களில் 21 மாணவர்கள் குடுமியான்மலை வேளாண்மை கல்லூரியிலிருந்து தேர்வு பெற்று, மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர். இதுபோன்ற வெற்றிகளை மாணவர்கள் தொடர்ந்து பெற வேண்டும்.
அன்றாடம் மாறிவரும் சமூகம் மற்றும் தொழிற்சாலைகளின் தேவைகளை கருத்தில் கொண்டு, மாணவர்கள் கூடுதல் திறன்களை வளர்த்துக் கொள்வது அவசியம். நேரத்தினை வீணடிக்காமல் நூலகம் மற்றும் இணைய வசதிகளை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இதில், கல்லூரி முதல்வர் செங்குட்டுவன், துறைத்தலைவர் மற்றும் துணை பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story