தீபாவளியையொட்டி கரூர் கடைவீதிகளில் கூட்டம் அலைமோதியது - தரைக்கடைகளில் விற்பனை அமோகம்
தீபாவளியையொட்டி கரூர் கடைவீதிகளில் கூட்டம் அலைமோதியது. மேலும், தரைக்கடைகளில் விற்பனை அமோகமாக நடைபெற்றது.
கரூர்,
நாளை (சனிக்கிழமை) தீபாவளி பண்டிகை. இதையடுத்து தீபாவளியை கொண்டாடுவதற்காக புத்தாடைகள், வீட்டு உபயோக பொருட்கள், நகைகள் மற்றும் இனிப்புகள், பட்டாசுகள் வாங்குவதற்காக கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கள் நேற்று கரூரை நோக்கி படையெடுக்கத் தொடங்கி விட்டனர்.
இதன் காரணமாக கரூர் ஜவகர்பஜார் கடைவீதி, கோவைரோடு, பஸ் நிலையபகுதி, பழைய பைபாஸ் ரோடு ஆகிய இடங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட சம்பவங்களை தடுக்க போலீசார் துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
மேலும் அந்த கடைவீதி பகுதிகளில் 46 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கூட்டத்தை கண்காணித்து சந்தேகப்படும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதைத் தவிர பஸ் நிலையம், ஜவகர்பஜார் உள்ளிட்ட இடங்களில் கண்காணிப்பு கோபுரம் அமைத்து கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்கின்றனர். மேலும் கடைவீதிக்கு வந்த பொதுமக்களிடம் முககவசம் அணியுமாறும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும் போலீசார் அறிவுறுத்தினர்.
இதைத்தவிர கரூர் தாலுகா அலுவலகம் அருகே உள்ள புறக்காவல்நிலையத்திலும் போலீசார் அமர்ந்து பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். மேலும் ஏ.டி.எம். கார்டினை தெரியாத வெளிநபர்களிடம் கொடுக்க கூடாது, காரில் விலை உயர்ந்த பொருட்களை வைத்து விட்டு செல்ல கூடாது என்பன போன்ற அறிவுரையினை விழிப்புணர்வு ஆட்டோக்களில் சென்றபடி போலீசார் அறிவித்து வருகின்றனர்.
கரூர் ஜவகர்பஜார் அருகே உள்ள திருவள்ளுவர் மைதானத்தில் 200-க்கும் மேற்பட்ட தரைக்கடைகள் அமைக்கப்பட்டு, விற்பனை அமோகமாக நடந்து வருகிறது.
இதில் பட்டாசு கடைகள், ஆண்களுக்கான பேண்ட், சர்ட்கள், பெண்களுக்கான புடவை, சுடிதார் மற்றும் வளையல்கள் உள்ளிட்ட பொருட்கள், குழந்தைகளுக்கான துணி வகைகள் என ஏராளமான கடைகள் வைக்கப்பட்டு, விற்பனை அமோகமாக நடந்து வருகிறது.
இந்த தரைக்கடைகளில் குறைந்த விலைகளில் பொருட்கள் கிடைப்பதால் பொதுமக்களின் கூட்டம் அதிகமாக இருக்கிறது.
Related Tags :
Next Story