இலங்கைக்கு கடத்த இருந்த 500 கிலோ மஞ்சள்- புகையிலை பொருட்கள் பறிமுதல் - 3 பேர் கைது


இலங்கைக்கு கடத்த இருந்த 500 கிலோ மஞ்சள்- புகையிலை பொருட்கள் பறிமுதல் - 3 பேர் கைது
x
தினத்தந்தி 13 Nov 2020 10:15 AM IST (Updated: 13 Nov 2020 10:01 AM IST)
t-max-icont-min-icon

இலங்கைக்கு கடத்த இருந்த 500 கிலோ மஞ்சள், புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டத்தில் போதைப்பொருள் விற்பனை மற்றும் சட்டவிரோத செயல்களை தடுப்பது தொடர்பாக அதிரடி சோதனை நடத்த உத்தரவிடப்பட்டது. இதன்படி தங்கச்சிமடம் அருகே மெய்யம்புளி கிராமத்தில் ராஜா என்பவரின் மகன் விக்கி என்பவரது தென்னந்தோப்பில் இலங்கைக்கு கடத்த வைத்திருந்த 500 கிலோ சமையல் மஞ்சள் கைப்பற்றப்பட்டது.

முதுகுளத்தூர் பஸ் நிலையம் அருகில் அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 200 கிலோ புகையிலை பொருட்களை கடத்தி வந்த மேலச்செல்வனூர் நடராஜன் மகன் பாலகுருநாதபக்கிரி வேல் என்பவரை போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பாக குளத்தூரை சேர்ந்த முருகன், விளாத்திகுளத்தை சேர்ந்த ஜெயராஜ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களிடம் இருந்து ஒரு ஆம்னி வேன் மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் கேணிக்கரை பகுதியில் 50 கிலோ புகையிலை பொருட்கள் கடத்தி வந்த சின்னக்கடை பகுதியை சேர்ந்த பாசித்ராஜா என்பவர் மீது வழக்கு பதிவு செய்து கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. ராமேசுவரம் விட்டில் பிள்ளை முடுக்கு தெருவை சேர்ந்த சவுந்தரபாண்டியன் மகன் மாரிமுத்து என்பவர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் 286 மதுபாட்டில்களும், 62 பீர்பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இதனை தொடர்ந்து மாரிமுத்துவை போலீசார் கைது செய்தனர்.

பாம்பன் சின்னப்பாலம் பகுதியை சேர்ந்த அலெக்சாண்டர் மகன் ரீகன் என்பவரின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் 990 மதுபாட்டில்களும், 36 பீர்பாட்டில்களும் பறிமுதல் செய்து அவரை போலீசார் கைது செய்தனர்.

இதுபோன்று சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பொதுமக்கள் தங்களது பகுதியில் நடைபெறும் சட்டவிரோதமான செயல்கள், மணல் கடத்தல், போதைபொருட்கள் விற்பனை, சூதாட்டம், லாட்டரி விற்பனை மற்றும் பிற ரகசிய தகவல்கள், குறைபாடுகள் மற்றும் வேறு ஏதேனும் புகார்கள் இருந்தால் ஹலோ போலீஸ் பிரிவினை 8300031100 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். இதுதவிர, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டை 8778247265 என்ற எண்ணில் நேரடியாக தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்களின் விவரம் ரகசியமாக வைத்துகொள்ளப்படும். இந்த தகவலை ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் தெரிவித்தார்.

Next Story