தீபாவளி பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு சென்ற பொதுமக்கள் - விக்கிரவாண்டி, உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடிகளில் கடும் போக்குவரத்து நெரிசல்
தீபாவளி பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாடுவதற்காக சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு பொதுமக்கள் சென்ற வண்ணம் உள்ளனர். இதனால் விக்கிரவாண்டி, உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடிகளில் அணிவகுத்து சென்ற வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
விக்கிரவாண்டி,
இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி பண்டிகை நாளை (சனிக்கிழமை) நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி பொதுமக்கள் புத்தாடைகள், பட்டாசுகளை வாங்க கடைவீதிகளுக்கு கூட்டம், கூட்டமாக செல்கின்றனர். இதனால் மாவட்டத்தில் உள்ள கடைவீதிகளில் எங்கு பார்த்தாலும் திருவிழா கூட்டம்போல் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதன் காரணமாக முக்கிய சாலைகளில் வாகனங்கள் ஸ்தம்பித்து பல மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
மேலும் வெளியூரில் தங்கியிருந்து பணியாற்றி வருபவர்கள் அவரவர் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களுடன் தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாட கடந்த 2 நாட்களாக தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச்சென்ற வண்ணம் உள்ளனர். இதனால் பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் வழக்கத்திற்கும் மாறாக அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக விழுப்புரம் புதிய பஸ் நிலையம், உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர், செஞ்சி பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.
மேலும் தீபாவளி விடுமுறையை கழிக்க பலர் அவரவர் சொந்த ஊர்களுக்கு கார்களிலும் செல்கின்றனர். இதனால் தேசிய நெடுஞ்சாலையில் அதிகளவில் வாகனங்கள் அணிவகுத்து செல்கின்றன. ஒரே நேரத்தில் அணிவகுத்து செல்லும் வாகனங்களால் விக்கிரவாண்டி, உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு நூற்றுக்கணக்கான வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.
குறிப்பாக விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் நேற்று மாலை முதல் வாகன போக்குவரத்து அதிகரித்ததால் சுங்கச்சாவடி மேலாளர் அசோக்குமார் தலைமையில் ஊழியர்கள் வாகன போக்குவரத்தை சரிசெய்தும் செல்போன் மூலம் சுங்கவரிகளை வசூல் செய்தும் வாகனங்களை அனுப்பி வைத்தனர். தென் மாவட்டங்களுக்கு வாகனங்கள் போக்குவரத்து தடையின்றி செல்ல கூடுதலாக 2 வழிகள் திறக்கப்பட்டு 8 வழிப்பாதைகளில் வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. சராசரியாக நாள் ஒன்றுக்கு 25 ஆயிரம் வாகனங்கள் செல்வது வழக்கம். ஆனால் நேற்று வழக்கத்தை விட 15 ஆயிரம் வாகனங்கள் கூடுதலாக தென்மாவட்டங்களுக்கு சென்றன. அந்த வாகனங்களுக்கு உடனுக்குடன் சுங்கவரி வசூல் செய்து விரைந்து செல்ல வழிவகை செய்தனர். இருப்பினும் சில மணி நேரம் இந்த போக்குவரத்து நெரிசல் நீடித்து அதன் பிறகே சரியானது. இந்த போக்குவரத்து நெரிசலில் சிக்கி பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.
Related Tags :
Next Story