பெங்களூருவில் துப்பாக்கி முனையில் ரவுடி ஜானி கைது - வேலூர் தனிப்படை போலீசார் அதிரடி
பெங்களூருவில் பதுங்கியிருந்த பிரபல ரவுடி ஜானியை துப்பாக்கி முனையில் வேலூர் தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர் தனது மனைவியிடம் ‘காப்பாற்றுங்கள்’, ‘காப்பாற்றுங்கள்’ என கதறும் காட்சி ‘வாட்ஸ்அப்’பில் வைரலாக பரவி வருகிறது.
வேலூர்,
வேலூரை அடுத்த காட்பாடி வண்டறந்தாங்கல் பகுதியை சேர்ந்தவர் ஜானி. இவர் மீது கொலை, கொள்ளை, ஆள்கடத்தல் உள்பட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. இந்த வழக்குகள் வேலூர் மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் நிலுவையில் உள்ளது. இதனிடையே வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த இவர் ஜாமீனில் வெளியே வந்தார். அதன்பின்பு ஜானி தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வந்தனர். மேலும் வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் உத்தரவின் பேரில் 3 சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.
இந்த நிலையில் ரவுடி ஜானி பெங்களூருவில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் தனிப்படை போலீசார் பெங்களூருவுக்கு விரைந்தனர். அங்கு பதுங்கி இருந்த ஜானியை போலீசார் சுற்றி வளைத்தனர். அப்போது அவர் தப்பியோட முயன்றார். ஆனால் போலீசார் அவரை துப்பாக்கி முனையில் கைது செய்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே ரவுடி ஜானி தனது மனைவியிடம் செல்போன் ‘வாட்ஸ் அப்’பில் வீடியோ காலில் பேசினார். அதில் அவர் தன்னை ‘காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்...என்று கூச்சலிட்டவாறே ஓடியது பதிவாகி உள்ளது. அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பிரபல ரவுடியான ஜானியை கைது செய்யப்பட்டது வேலூர் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story