நாகர்கோவிலில் தனியார் பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
நாகர்கோவிலில் தனியார் பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகர்கோவில்,
தமிழ்நாடு தனியார் பள்ளி (அரசு உதவி பெறும் பள்ளிகள்) ஆசிரியர் அலுவலர் சங்கம் சார்பில் நாகர்கோவிலில் உள்ள முதன்மை கல்வி அதிகாரி அலுவலக வளாகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் அரசு உதவி பெறும் பள்ளிகளையும் இணைத்து புதிய அரசாணை வெளியிட வேண்டும். மேலும் இடஒதுக்கீட்டை நிபுணர்குழு பரிந்துரைத்தபடி 10 சதவீதமாக அதிகரிக்க வேண்டும். குறிப்பாக தமிழகத்தில் தமிழில் படிக்கும் அனைத்து மாணவர்களையும் இவ்விட ஒதுக்கீட்டிற்குள் கொண்டு வரவேண்டும்.
அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆங்கில வழி இணை பிரிவினை அனுமதிக்கும் அரசாணையை எவ்வித நிபந்தனைகளுமின்றி நடைமுறைப்படுத்தி அரசு பள்ளி மாணவர்கள் போல அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களும் இலவச ஆங்கில வழிக்கல்வி பயிலும் வாய்ப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார். மாநில தலைவர் அமலராஜன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். பொதுச்செயலாளர் கனகராஜ், மாவட்ட செயலாளர் விஜயராஜ், வினோத் உள்பட பலர் கலந்துகொண்டனர். தங்களது கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களையும் எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் ஆசிரியர்களும், ஆசிரியைகளும் திரளாக கலந்துகொண்டனர். இதனால் முதன்மை கல்வி அதிகாரி அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது.
Related Tags :
Next Story