ஈரோட்டில் தொழிலக பாதுகாப்பு அதிகாரி அலுவலகத்தில் - லஞ்ச ஒழிப்பு சோதனை
ஈரோட்டில் தொழிலக பாதுகாப்பு அதிகாரி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.8½ லட்சம் சிக்கியது.
ஈரோடு,
ஈரோடு எஸ்.கே.சி. ரோடு கந்தப்பா வீதியில் தனியாருக்கு சொந்தமான குடியிருப்பில், மாவட்ட தொழிற்சாலைகள் துணை தலைமை ஆய்வாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. துணை தலைமை ஆய்வாளராக வேல்முருகன் என்பவர் பணியாற்றி வருகிறார். இதே அலுவலகத்தில் தொழிற்சாலைகள் துணை இயக்குனர் சந்திரமோகன் மற்றும் இணை இயக்குனர் அமர்நாத் ஆகியோரின் அலுவலகங்களும் இயங்கி வருகிறது.
இந்த அலுவலகத்தில், தொழிற்சாலைகள் உரிமம் பெறுவதற்கும், தொழிற்சாலைகளில் உள்ள எந்திரங்கள் பாதுகாப்பானதாக உள்ளதா? என்பதையும் ஆய்வு செய்து உரிம சான்று வழங்குவது முக்கிய பணியாகும். இந்த நிலையில், துணை தலைமை ஆய்வாளர் மற்றும் அவருக்கு கீழ் இருக்கும் அதிகாரிகள் தொழிற்சாலைகள் உரிமம் பெறுவதற்கும், உரிமத்தை புதுப்பிக்கவும் லஞ்சம் கேட்பதாக தொடர் புகார்கள் வந்தன.
மேலும் தீபாவளி நன்கொடையும் அதிக அளவில் கேட்டு வருவதாக தொழிற்சாலை உரிமையாளர்கள் சிலர் ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், லஞ்ச ஒழிப்பு துறை துணை போலீஸ் சூப்பிரண்டு திவ்யா தலைமையில், இன்ஸ்பெக்டர் ரேகா உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட போலீசார் சம்மந்தப்பட்ட தொழிற்சாலைகள் துணை தலைமை ஆய்வாளர் அலுவலகத்தில் நேற்று இரவு திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது, கணக்கில் வராத ரூ.8 லட்சத்து 50 ஆயிரம் அலுவலகத்தில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அதிகாரிகளின் காரில் சோதனை செய்தபோது, அதில் தொழிற்சாலைகளில் இருந்து பெறப்பட்ட நன்கொடை குறித்த விவரம் அடங்கிய டைரி, பரிசு பொருட்கள் போன்றவையும் இருந்தது. இதைத்தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் பணம் மற்றும் ஆவணங்களை பறிமுதல் செய்து, அலுவலகத்தில் இருந்த ஆய்வாளர் வேல்முருகன், துணை இயக்குனர் சந்திரமோகன் ஆகியோரிடம் தீவிர விசாரணை நடத்தினர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் நேற்று இரவு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story