ஓசூரில் போலி ஆவணம் கொடுத்து நிலத்தை பதிவு செய்ய முயற்சி - ரியல் எஸ்டேட் புரோக்கர்கள் உள்பட 5 பேர் கைது


ஓசூரில் போலி ஆவணம் கொடுத்து நிலத்தை பதிவு செய்ய முயற்சி - ரியல் எஸ்டேட் புரோக்கர்கள் உள்பட 5 பேர் கைது
x
தினத்தந்தி 13 Nov 2020 8:32 PM IST (Updated: 13 Nov 2020 8:32 PM IST)
t-max-icont-min-icon

ஓசூரில் போலி ஆவணம் கொடுத்து நிலத்தை பதிவு செய்ய முயன்றதாக 3 ரியல் எஸ்டேட் புரோக்கர்கள் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஓசூர், 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் சார் பதிவாளர் அலுவலகம் உள்ளது. இங்கு சார் பதிவாளராக சண்முகவேல் (வயது 48) என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 10-ந் தேதி பணியில் இருந்தபோது 5 பேர் வந்தனர். பின்னர் அவர்கள் நிலம் ஒன்றை பதிவு செய்ய வேண்டும் என்று கூறினர்.

பின்னர் அவர்கள் கொடுத்த ஆவணங்களை சார் பதிவாளர் சரிபார்த்தபோது அவை போலி ஆவணங்கள் என்றும், அதை போலியாக தயாரித்து, ஒருவர் பெயரில் பதிவு செய்யவந்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து சார் பதிவாளர் சண்முகவேல் ஓசூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராகவன் வழக்குப்பதிவு செய்து, போலி ஆவணம் தயாரித்து நிலத்தை பதிவு செய்ய வந்த திருவள்ளூர் மாவட்டம் மேதா நகர் கம்பன் தெருவை சேர்ந்த ரியல் எஸ்டேட் புரோக்கர் பாஸ்கரன் (40), புதுச்சேரி மாநிலம் காரைக்கால் கணபதி நகர் ஆட்டோ டிரைவர் முகமது ஆசிப் ரசூல் (30), பாகலூர் கோட்டை ரியல் எஸ்டேட் புரோக்கர் ஆஞ்சனப்பா (50), பாகலூர் தேர்பேட்டை ரியல் எஸ்டேட் புரோக்கர் மஞ்சுநாத் (40), காரைக்கால் சம்சுதீன் (65) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது மோசடி உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Next Story