சேலம் மாநகரில் தீபாவளி திருடர்களை பிடிக்க போலீசார் தீவிர கண்காணிப்பு
சேலம் மாநகரில் தீபாவளி திருடர்களை பிடிக்க போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சேலம்,
தீபாவளி பண்டிகை நாளை (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையையொட்டி புத்தாடைகள் மற்றும் பட்டாசுகள் வாங்குவதற்காக நேற்று சேலத்தில் முதல் அக்ரஹாரம், கடைவீதி, சின்னகடை வீதி உள்பட கடைகள் உள்ள அனைத்து பகுதிகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் உறவினர்களுக்கு இனிப்புகள் வாங்கி கொடுப்பதற்காக சுவீட்ஸ் கடைகளிலும் கூட்டம் அதிகளவு காணப்படுகிறது. தீபாவளியையொட்டி சேலம் மாநகரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இருந்தாலும் இந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி பணம், நகைகளை பறிப்பதற்காக ஒரு கும்பல் நடமாடுகிறது. இந்த தீபாவளி திருடர்களை கூண்டோடு கைது செய்வதற்காக மாநகரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சேலம் மாநகர போலீஸ் துணை கமிஷனர் சந்திரசேகரன் தலைமையில் போலீசார் கண்காணித்து வருகின்றனர். தமிழ்நாடு சிறப்பு காவல் படை, ஊர்க்காவல் படை, ஆயுதப்படை போலீசார் பலர் சாதாரண உடையிலும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
தீபாவளி பொருட்கள் வாங்க நேற்று கூட்டம் அதிகமாக காணப்பட்டதால் சேலம் கடைவீதி வழியாக பஸ்கள் செல்லாத வகையில் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது. அம்மாபேட்டை, அயோத்தியாப்பட்டணம், வாழப்பாடி ஆகிய பகுதிகளில் இருந்து சேலம் பழைய பஸ் நிலையத்துக்கு வரும் டவுன் பஸ்கள் அம்மாபேட்டை போலீஸ் நிலையம் அருகே திருப்பி விடப்பட்டன.
மணல் மார்க்கெட் வழியே பஸ்கள் சென்று பழைய பஸ் நிலையம் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. டவுன் பகுதியில் மொபட் மற்றும் மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்கள் மட்டுமே செல்ல போலீசார் அனுமதி அளித்தனர்.
தீபாவளி பண்டிகைக்கு இன்று ஒருநாள் மட்டுமே இருப்பதால் நேற்று சேலம் மாநகரில் கலெக்டர் அலுவலகம், பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், சூரமங்கலம் ரெயில் நிலையம், 4 ரோடு, 5 ரோடு, அழகாபுரம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் நேற்று கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகினர்.
கூட்டம் நிறைந்த இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் கண்காணிப்பு கேமராக்கள் மூலமும் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story