கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் தரிசனம்


கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் தரிசனம்
x
தினத்தந்தி 13 Nov 2020 10:27 PM IST (Updated: 13 Nov 2020 10:27 PM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாணம் நடந்தது.

கோவில்பட்டி, 

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கடந்த 31-ந் தேதி கொடியேத்துடன் தொடங்கியது. கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு அரசு வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் உத்தரவின்படி, பூஜை நேரங்களில் பக்தர்கள் மற்றும் உபயதாரர்கள் கோவிலுக்குள் தரிசனம் செய்ய அனுமதி இல்லை. அதனால் திருவிழாவில் மண்டகப்படிதாரர்கள் கோவில் உள்ளே வந்து அபிஷேகம் மற்றும் இதர பூஜைகளில் கலந்து கொள்ள அனுமதி கிடையாது என ஏற்கெனவே கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி 9-ம் நாளான 8-ந் தேதி தேர் திருவிழா நடைபெறவில்லை. மேலும் தினமும் இரவு 7 மணிக்கு கோவில் உட்பிரகாரத்தில் சுவாமி உலா நடைபெற்றது.

திருக்கல்யாணம்

12-ம் நாளான நேற்று முன்தினம் சுவாமி - அம்பாள் திருக்கல்யாண வைபோகம் நடந்தது. இதையொட்டி கோவில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. தொடர்ந்து திருவனந்தல் மற்றும் திருப்பள்ளி எழுச்சி பூஜை நடந்தது. காலை 10 மணிக்கு அம்மன் பல்லக்கில் வீதியுலா வரும் நிகழ்ச்சியும், செண்பகவல்லி அம்பாள், உற்சவ அம்பாளுக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனையும் நடந்தது. இதையடுத்து, சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடந்தது.

இரவில் சுவாமி, அம்பாள் மணக்கோலத்தில் அலங்கரிக்கப்பட்டு கோவில் வளாகத்தில் உள்ள மண்டபத்தில் இரவு 7 மணிக்கு எழுந்தருளினர். திருமண மரபுகளுடன் நீலாதேவி, ஸ்ரீதேவி சமேத சுந்தரராஜ பெருமாள் பல்லக்கு அலங்காரத்தில் பூவனநாத சுவாமி செண்பகவல்லி அம்பாள் திருக்கல்யாணத்துக்கு அழைத்து வரப்பட்டார்.

பக்தர்கள் தரிசனம்

சுந்தரராஜ பெருமாள், ராஜகோபாலசுவாமி கோவில்கள் மண்டகப்படிதாரர்கள் சார்பில் திருமண சீர் கொண்டுவரப்பட்டது. தொடர்ந்து, சுந்தரராஜ பெருமாள் சுவாமி முன்னிலையில், சுவாமி - அம்பாள் திருக்கல்யாணம் நடந்தது. பின்னர் சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. அதனை தொடந்து சுவாமி யானை வாகனத்திலும், அம்மன் பல்லக்கிலும் பட்டணப்பிரவேசம் சென்றனர். சுவாமி - அம்பாள் திருக்கல்யாண வைபோகத்தை திரளான பக்தர்கள் கோவிலுக்கு வெளியே இருந்து பார்த்து தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

புற்றுக்கோவில்

கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண விழா நடந்தது. விழாவையொட்டி காலையில் கணபதி பூஜையும், தொடர்ந்து விநாயகர் முருகன், சுவாமி அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. காலையில் கொலுமண்டபத்தில் சுவாமி-அம்பாள் ரிஷப வாகனத்தில் அலங்கரிக்கப்பட்டு திருமண வைபவம் நிகழ்ச்சி நடந்தது. பக்தர்களுக்கு மங்கள பொருட்கள், இனிப்பு வழங்கப்பட்டது.

Next Story