ஆந்திராவில் இருந்து காய்கறி லாரியில் கடத்தி வந்து விற்பனை ரூ.50 லட்சம் கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது


ஆந்திராவில் இருந்து காய்கறி லாரியில் கடத்தி வந்து விற்பனை ரூ.50 லட்சம் கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது
x
தினத்தந்தி 14 Nov 2020 2:22 AM IST (Updated: 14 Nov 2020 2:22 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார். ஆந்திராவில் இருந்து காய்கறி லாரியில் கடத்தி வந்த ரூ.50 லட்சம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரு, 

பெங்களூரு ராஜகோபால்நகர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது பீனியா 2-வது ஸ்டேஜ் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சுற்றிய வாலிபரை பிடித்து விசாரித்தனர். மேலும் அவரது மோட்டார் சைக்கிளை சோதனை நடத்திய போது, அதற்குள் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த வாலிபரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

அப்போது சிக்கபள்ளாப்பூர் மாவட்டத்தை சேர்ந்த சிவக்குமார் (வயது 27) என்று தெரிந்தது. அவரிடம் இருந்து 17 கிலோ கஞ்சா, ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் கஞ்சா விற்பனையின் மூலம் கிடைத்த ரூ.3 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில், சிவக்குமார் லாரி டிரைவராக வேலை செய்து வந்தது தெரியவந்தது.

110 கிலோ கஞ்சா பறிமுதல்

மேலும் ஆந்திரா மாநிலத்திற்கு காய்கறிகள் ஏற்ற செல்லும் போது, அங்கு குறைந்த விலைக்கு கஞ்சாவை வாங்கி, அதனை காய்கறிக்குள் மறைத்து வைத்து பெங்களூருவுக்கு கடத்தி வருவதை சிவக்குமார் தொழிலாக வைத்திருந்தார். அவ்வாறு கடத்தி வரும் கஞ்சாவை பெங்களூரு மற்றும் சிக்கபள்ளாப்பூரில் தனக்கு தெரிந்தவர்களிடம் அதிக விலைக்கு விற்று பணம் சம்பாதித்து வந்தது தெரியவந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட ஆந்திராவில் இருந்து காய்கறி ஏற்றி வந்த லாரியில் 110 கிலோ கஞ்சா கடத்தி வந்ததாகவும் அவர் போலீசாரிடம் கூறினார்.

இதையடுத்து, சிக்கப்பள்ளாப்பூரில் உள்ள சிவக்குமார் வீட்டில் சோதனை நடத்திய போது 93 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கைதான சிவக்குமாரிடம் இருந்து ஒட்டு மொத்தமாக 110 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், அவற்றின் மதிப்பு ரூ.50 லட்சம் என்று துணை போலீஸ் கமிஷனர் தர்மேந்திரகுமார் மீனா தெரிவித்துள்ளார். கைதான சிவக்குமார் மீது ராஜகோபால்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story