ஓடும் ரெயிலில் இருந்து ஆற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை பெங்களூருவை சேர்ந்தவர்
சிவமொக்காவில், ஓடும் ரெயிலில் இருந்து ஆற்றில் குதித்து பெங்களூருவைச் சேர்ந்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
சிவமொக்கா,
பெங்களூருவில் இருந்து சிவமொக்காவுக்கு நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு ஜன சதாப்தி ரெயில் புறப்பட்டது. அந்த ரெயில் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் சிவமொக்கா பழைய ரெயில் நிலையத்தில் இருந்து புதிய ரெயில் நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த ரெயில் துங்கா ஆற்றின் பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென ரெயிலில் இருந்து ஒரு இளம்பெண் ஆற்றில் குதித்துவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் உடனடியாக ரெயிலை நிறுத்தினர். இருப்பினும் அந்த ரெயில் டவுன் ரெயில் நிலையத்திற்கு வந்துதான் நின்றது. பின்னர் அந்த இளம்பெண்ணின் தாய் கதறி துடித்தபடி ரெயில்வே போலீசாரிடம் முறையிட்டார்.
அவர்கள் உடனடியாக தீயணைப்பு துறையினர், நீச்சல் வீரர்கள் ஆகியோருடன் சென்று ஆற்றில் அந்த இளம்பெண்ணை தேடினர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. நேற்று மாலை 6 மணி வரை தொடர்ந்து அவரை தேடினர். ஆனாலும் அந்த இளம்பெண் கிடைக்கவில்லை. இரவு நேரமானதால் அவரை தேடும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அந்த பெண் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.
தற்கொலை
இதற்கிடையே போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் ஆற்றில் குதித்தது பெங்களூருவைச் சேர்ந்த சஹானா(வயது 24) என்பது தெரியவந்தது. சஹனாவின் தாய் சுஜாதா ஆவார். சஹானா ஆடிட்டர் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்தார். வருகிற 22-ந் தேதி சிவமொக்காவில் ஆடிட்டர் தேர்வு எழுத இருந்தார். இதற்காகத்தான் பெங்களூருவில் இருந்து சஹானா, தனது தாய் சுஜாதாவுடன் ரெயிலில் சிவமொக்காவுக்கு வந்துள்ளார்.
இந்த நிலையில்தான் அவர் ஓடும் ரெயிலில் இருந்து ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்த நேரத்தில் அவரது தாய் சுஜாதா ரெயிலில் உள்ள கழிவறைக்கு சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. சஹானாவின் தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. இதுபற்றி சிவமொக்கா கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் சிவமொக்காவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story