மதுரை ஜவுளிக்கடையில் தீ விபத்து: தீயணைப்பு பணியில் 2 வீரர்கள் பலி


மதுரை ஜவுளிக்கடையில் தீ விபத்து: தீயணைப்பு பணியில் 2 வீரர்கள் பலி
x
தினத்தந்தி 15 Nov 2020 5:15 AM IST (Updated: 15 Nov 2020 1:24 AM IST)
t-max-icont-min-icon

மதுரை தெற்கு மாசி வீதியில் உள்ள ஜவுளிக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்தனர்.

மதுரை,

மதுரை தெற்கு மாசி வீதியில் உள்ள ஜவுளிக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் 2 பேர் காயம் அடைந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அமைந்துள்ள பகுதியை சுற்றியுள்ள தெற்கு மாசி வீதியில் பாபுலால் என்பவருக்குச் சொந்தமான துணிக்கடை உள்ளது. இங்கு மேல் மாடியில் துணிக்கடை குடோன் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் நள்ளிரவு திடீரென தீப்பிடித்தது.

உடனடியாக மீனாட்சி அம்மன் கோவில் தீயணைப்பு துறையினர் மற்றும் பெரியார் பேருந்து நிலைய தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அந்த கட்டிடம் நூற்றாண்டை கடந்த பழைய கட்டிடம் என்று கூறப்படுகிறது.

வீரர்கள் கட்டிடத்தின் உட்பகுதியில் தீயை அணைத்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக கட்டிடத்தின் உட்பகுதி சாளரம் திடீரென இடிந்து விழுந்தது. இதில் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த வீரர்கள் சிவராஜன், கிருஷ்ணமூர்த்தி, கல்யாணகுமார், சின்னக்கருப்பு ஆகியோர் கட்டிட இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர்.

உடனடியாக அவர்களை சக வீரர்கள் மீட்டனர். இதில் சிவராஜன், கிருஷ்ணமூர்த்தி ஆகிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த கல்யாணகுமார், சின்னக்கருப்பு ஆகிய இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

தீபாவளி திருநாளில் தீயணைப்பு பணியில் ஈடுபட்ட 2 தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையே தீயணைப்பு வீரர்கள் 2 பேரின் மறைவுக்கு தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் அவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்குவதாகவும், அவர்களின் குடும்பத்தில் தலா ஒருவருக்கு கல்வி தகுதிக்கு ஏற்ப வேலை வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

மேலும் இந்த சம்பவத்தில் காயம் அடைந்த ஆர்.கல்யாணகுமார், சின்னக்கருப்பு ஆகியோருக்கு தலா ரூ.3 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்றும், மேலும் அவர்களின் மருத்துவ சிகிச்சைக்கான செலவை அரசே ஏற்கும் என்றும் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார். மேலும் அவர், காயம் அடைந்தவர்கள் விரைவாக குணம் அடைய பிரார்த்திப்பதாகவும், அவர்களுகு உயர்தர மருத்துவ சிகிச்சை கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டு இருப்பதாகவும் முதல்-அமைச்சர் தெரிவித்துள்ளார்.


Next Story