விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழை: வீடுகளை தண்ணீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதி


விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழை: வீடுகளை தண்ணீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதி
x
தினத்தந்தி 15 Nov 2020 11:57 AM IST (Updated: 15 Nov 2020 11:57 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் மாவட்டத்தில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழையால் பல இடங்களில் வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்தனர்.

கடலூர்,

வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் கடந்த மாதம் 28-ந்தேதி தொடங்கியது. பருவமழை தொடங்கியதில் இருந்து தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் பரவலாக மழை பெய்து கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் தமிழக கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 12 மற்றும் 13-ந்தேதிகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், புதுச்சேரி, காரைக்கால் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.

அந்த வகையில் நேற்று முன்தினம் இரவு 9.45 மணி அளவில் கடலூர் மாவட்டத்தில் மழை பெய்ய தொடங்கியது. நேரம் செல்ல செல்ல இடி-மின்னலுடன் கனமழை பெய்தது. இந்த மழை நள்ளிரவு 12.30 மணி வரை கொட்டி தீர்த்தது. அதன் பிறகு 2 மணி வரை தூறிக்கொண்டே இருந்தது.

இதற்கிடையே 2 மணிக்கு பிறகு மீண்டும் கனமழை பெய்ய தொடங்கியது. இந்த மழை விடிய விடிய பெய்து கொண்டே இருந்தது. மேலும் நேற்று மதியம் வரை மழை பெய்து கொண்டே இருந்தது. இந்த கனமழையால் சாலைகளில் மழைநீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் குளம்போல் தேங்கியது. கடலூர் நகரில் கூத்தப்பாக்கம், முத்தையாநகர், ஸ்டேட் பாங்க் காலனி, நத்தவெளி சாலை, பாதிரிக்குப்பம், கே.என்.பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு வீடுகளை மழைநீர் சூழ்ந்தது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் பெரிதும் அவதிப்பட்டனர்.

இதேபோல் வானமாதேவி, அண்ணாமலைநகர், பரங்கிப்பேட்டை, காட்டுமன்னார்கோவில், கொத்தவாச்சேரி, பண்ருட்டி, புவனகிரி, சிதம்பரம், ஸ்ரீமுஷ்ணம், சேத்தியாத்தோப்பு, லால்பேட்டை, கீழ்செருவாய், பெலாந்துறை, லக்கூர், வடக்குத்து, தொழுதூர், குறிஞ்சிப்பாடி மற்றும் மாவட்டம் முழுவதும் விடிய விடிய இடி-மின்னலுடன் கனமழை பெய்தது. இதில் அதிகபட்சமாக கடலூரில் 52 மில்லி மீட்டர் மழையும், குறைந்தபட்சமாக தொழுதூரில் 1.8 மில்லி மீட்டரும் பதிவாகி இருந்தது. இந்த கனமழையால் தீபாவளி பண்டிகைக்காக பொதுமக்கள் பொருட்கள் வாங்க முடியாமல் பாதிக்கப்பட்டனர். மேலும் சாலையோர தள்ளுவண்டி கடைக்காரர்களும், கனமழையால் வியாபாரம் செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Next Story