கோவில்பட்டி அருகே பயங்கரம் ஆட்டோ டிரைவர் குத்திக்கொலை தந்தை-தம்பி கைது
கோவில்பட்டி அருகே தீபாவளி தினத்தில் ஆட்டோ டிரைவர் குத்திக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவருடைய தந்தை, தம்பியை போலீசார் கைது செய்தனர்.
கோவில்பட்டி,
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே அழகப்பபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயபாண்டியன் (வயது 63). ஆடு மேய்க்கும் தொழிலாளி. இவருடைய மகன்கள் செல்லப்பாண்டி (29), முத்துப்பாண்டி (22).
செல்லப்பாண்டி ஆட்டோ டிரைவராக வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி, பக்கத்து ஊரான பாலகிருஷ்ணாபுரத்தில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். இவருக்கு சேர்மத்தாய் (23) என்ற மனைவியும், மாதேஷ் (6), செல்வகுமார் (4) ஆகிய 2 மகன்களும் உள்ளனர். முத்துப்பாண்டி, விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் உள்ள ஓட்டலில் புரோட்டா மாஸ்டராக வேலை செய்து வந்தார்.
கத்தியால் குத்திக்கொலை
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, செல்லப்பாண்டி தன்னுடைய மனைவி, குழந்தைகளுடன் அழகப்பபுரத்தில் உள்ள பெற்றோரின் வீட்டுக்கு சென்றார். அங்கு நேற்று முன்தினம் இரவில் செல்லப்பாண்டிக்கும், தந்தை விஜயபாண்டியனுக்கும் இடையே திடீரென்று வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது. அவர் கள் 2 பேரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.
இதனை தடுக்க முயன்ற தம்பி முத்துப்பாண்டியையும் செல்லப்பாண்டி தாக்கினார். இதனால் ஆத்திரம் அடைந்த முத்துப்பாண்டி அங்கிருந்த கத்தியை எடுத்து தன்னுடைய அண்ணன் என்றும் பாராமல் செல்லப்பாண்டியை சரமாரியாக குத்தியதாக கூறப்படுகிறது. இதில் நெஞ்சு, வயிறு உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் அடைந்த செல்லப்பாண்டி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
தந்தை-தம்பி கைது
இதனைப் பார்த்த குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும், கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு கலைக்கதிரவன், நாலாட்டின்புத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகாதேவி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இறந்த செல்லப்பாண்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துப்பாண்டி, விஜய பாண்டியன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
கோவில்பட்டி அருகே தீபாவளி பண்டிகை தினத்தில் ஆட்டோ டிரைவர் அவருடைய தம்பி, தந்தையால் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story