கர்நாடகத்தில் நடப்பு கல்வி ஆண்டு தொடக்கம் கல்லூரிகள் நாளை திறப்பு


கர்நாடகத்தில் நடப்பு கல்வி ஆண்டு தொடக்கம் கல்லூரிகள் நாளை திறப்பு
x
தினத்தந்தி 16 Nov 2020 4:37 AM IST (Updated: 16 Nov 2020 4:37 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் நடப்பு கல்வி ஆண்டிற்காக கல்லூரிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) திறக்கப்படுகின்றன. கொரோனா தடுப்பு விதிகளை தீவிரமாக கடைப்பிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

பெங்களூரு, 

கொரோனா பரவல் காரணமாக நடப்பு ஆண்டில் கடந்த ஜூன் மாதம் திறக்கப்பட வேண்டிய பள்ளி-கல்லூரிகள் இன்னும் திறக்கப்படவில்லை.

திறக்கப்பட உள்ளது

தற்போது வைரஸ் தொற்று பரவலின் வேகம் வெகுவாக குறைந்துவிட்டது. மாநிலத்தில் கொரோனா பாதிப்பு 10 ஆயிரம் வரை சென்ற நிலையில், தற்போது தினசரி 2 ஆயிரம் என்ற அளவில் குறைந்துள்ளது. இதனால் கர்நாடகத்தில் கல்வி நிலையங்களை திறப்பது குறித்து அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது.

கர்நாடகத்தில் டிகிரி கல்லூரிகள் 17-ந் தேதி (நாளை) திறக்கப்படும் என்று மாநில அரசு ஏற்கனவே அறிவித்தது. அதன்படி மாநிலத்தில் கல்லூரிகள் நாளை(செவ்வாய்க்கிழமை) திறக்கப்பட உள்ளது. மாணவர்கள் பெற்றோரின் ஒப்புதல் கடிதத்தை பெற்று வந்து கல்லூரி நிர்வாகத்திடம் வழங்க வேண்டும். அந்த ஒப்புதல் கடிதம் இருந்தால் மட்டுமே மாணவர்கள் கல்லூரிகளுக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறியுள்ளது. அனைத்து கல்லூரிகளும் வகுப்பறைகள் மற்றும் வளாகங்களை சானிடைசர் கொண்டு தூய்மைபடுத்தி உள்ளன.

கொரோனா

பரிசோதனை

ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. கல்லூரி தொடங்கும் நாளுக்கு 3 நாட்களுக்கு முன்பு இந்த பரிசோதனை செய்து, வைரஸ் தொற்று இல்லை என்ற சான்றிதழை காண்பித்தால் மட்டுமே வகுப்புகளுக்கு மாணவர்கள் அனுமதிக்கப்படுவார்கள். அதன்படி அந்தந்த கல்லூரி வளாகங்களில் கொரோனா பரிசோதனை முகாம் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

மாணவர்கள் தங்களின் கல்லூரிகளுக்கு வந்து கொரோனா பரிசோதனைக்கான சளி மாதிரியை வழங்க வேண்டும். ஒருவேளை மாணவர்கள் வேறு இடங்களில் கொரோனா பரிசோதனை செய்து கொண்டாலும், அதை ஏற்றுக்கொள்ளப்படும் என்று அரசு கூறியுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகங்களில் இந்த பரிசோதனையை செய்துகொள்ள வேண்டியது அவசியம் ஆகும்.

பண்டிகை காலம்

இந்த பரிசோதனை குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், “குறிப்பிட்ட காலத்திற்குள் அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்வது கடினமான ஒன்று. ஏனென்றால் இது பண்டிகை காலம். நடமாடும் பரிசோதனை கூடங்கள் வேறு இடங்களுக்கு சென்றுவிட்டன. அவசரமாக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று நினைக்கும் மாணவர்கள் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு செல்லலாம். தனியார் ஆய்வகங்களிலும் பரிசோதனை செய்து கொள்ளலாம்“ என்றனர்.

கல்லூரிகளில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை தீவிரமாக கடைபிடிக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. கல்லூரிகளுக்கு நேரடியாக வர விருப்பம் இல்லாத மாணவர்கள் ஆன்லைன் மூலமாகவும கல்வி கற்கலாம் என்று அரசு கூறியுள்ளது. அதனால் மாணவர்களின் வருகை பதிவு கட்டாயம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story