பெண் கைதிகளுடன் தீப விளக்கேற்றி கொண்டாடினர் சிறை அதிகாரிகளுக்கு, தீபாவளி வாழ்த்து தெரிவித்த நடிகை ராகிணி
தீபாவளி பண்டிகைக்காக சிறை அதிகாரிகளுக்கு வாழ்த்து அட்டைகளை தயாரித்து பரிசளித்து நடிகை ராகிணி திவேதி தீபாவளி வாழ்த்து தெரிவித்தார். மேலும் சக பெண் கைதிகளுடன் சேர்ந்து தீப விளக்கேற்றி தீபாவளியை கொண்டாடினார்.
பெங்களூரு,
பெங்களூருவில் போதைப்பொருள் விற்பனை மற்றும் கன்னட திரை உலகில் போதைப்பொருட்கள் பயன்படுத்திய விவகாரம் தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி உள்பட 15-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். நடிகைகளின் ஜாமீன் மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதால், அவர்கள் பரப்பனஅக்ரஹாராவில் தொடர்ந்து சிறைவாசம் அனுபவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்கு நேற்று முன்தினம் சிறை அதிகாரிகளிடம் நடிகைகள் ராகிணி, சஞ்சனா கல்ராணி ஆகியோர் புதிய ஆடைகள் கேட்டதாகவும், தங்களது குடும்பத்தினரை சிறைக்கு வரவழைக்கும்படி கூறியதாகவும் தகவல்கள் வெளியானது. அதே நேரத்தில் நேற்று தீபாவளி பண்டிகைக்காக புதுவிதமாக சிறை அதிகாரிகளுக்கு நடிகை ராகிணி வாழ்த்து கூறிய சம்பவம் நடந்துள்ளது.
பேப்பரில் வாழ்த்து அட்டை
அதாவது சிறையில் உள்ள பேப்பர்கள் மூலமாக நடிகை ராகிணி தீபாவளி வாழ்த்து அட்டைகளை தயாரித்துள்ளார். பேப்பரால் தயாரித்த அந்த வாழ்த்து அட்டைகளை சிறை அதிகாரிகளுக்கு நேற்று நடிகை ராகிணி கொடுத்து தீபாவளி வாழ்த்தை தெரிவித்துள்ளார். பதிலுக்கு சிறை அதிகாரிகளும் ராகிணிக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள். அதே நேரத்தில் தீபாவளி பண்டிகைக்காக சிறையிலேயே சக பெண் கைதிகளுடன் சேர்ந்து நடிகைகள் ராகிணி, சஞ்சனா தீப விளக்கேற்றி கொண்டாடியதாக தகவல் வெளியாகி உள்ளது.
அத்துடன் நேற்று சிறையில் உள்ள கோவிலில் நடிகைகள் ராகிணி, சஞ்சனா சாமி தரிசனம் செய்து வழிபட்டுள்ளனர். அதே நேரத்தில் தீபாவளி பண்டிகையை சிறையிலேயே கொண்டாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கூறி சக பெண் கைதிகளிடம் கூறி 2 நடிகைகளும் தங்களது வருத்தத்தை தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
Related Tags :
Next Story