காசிமேடு மீன்பிடி துறைமுகம் அருகே ராட்சத அலையில் சிக்கி என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் பலி - மேலும் 4 பேர் மாயம்


காசிமேடு மீன்பிடி துறைமுகம் அருகே ராட்சத அலையில் சிக்கி என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் பலி - மேலும் 4 பேர் மாயம்
x
தினத்தந்தி 16 Nov 2020 5:32 AM IST (Updated: 16 Nov 2020 5:32 AM IST)
t-max-icont-min-icon

காசிமேடு மீன்பிடி துறைமுகம் அருகே கடலில் குளிக்கச்சென்ற என்ஜினீயரிங் கல்லூரி மாணவர், ராட்சத அலையில் சிக்கி பலியானார். மேலும் 4 மாணவ-மாணவிகளை கடல் அலை இழுத்து சென்றது.

திருவொற்றியூர்,

சென்னை வண்ணாரப்பேட்டை கப்பல்போலு தெருவைச் சேர்ந்தவர் சவுந்திரராஜன், சமையல்காரர். இவருடைய மகன் அருள்ராஜ் (வயது 19), அரியலூரில் தங்கி தனியார் என்ஜினீயரிங் கல்லூரியிலும், மகள் துர்கா (14) 10-ம் வகுப்பும் படித்தனர். இவர்கள் 2 பேரும் தீபாவளி விடுமுறைக்கு சென்னையில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு வந்துள்ளனர்.

மீண்டும் ஊர் திரும்ப இருந்த நிலையில் கடற்கரைக்கு செல்ல திட்டமிட்டிருந்தனர். அதே பகுதியில் வசிக்கும் பாபு என்பவருடைய மகனான 9-ம் வகுப்பு படித்து வந்த விஷ்ணு (14), ஜான்சன் என்பவருடைய இரட்டை குழந்தைகளான 6-ம் வகுப்பு படித்து வந்த மகன் மார்டின் (13), மகள் மார்க்ரேட் (13) ஆகிய 5 பேரும் பெற்றோருடன் புதுவண்ணாரப்பேட்டை செரியன் நகர் கடற்கரையில் நேற்று மாலை குளிக்க சென்றனர்.

அப்போது கடல் சீற்றம் அதிகமாக இருந்தது. 5 பேரும் கடலில் குளித்து விளையாடியபோது கடலில் திடீரென தோன்றிய ராட்சத அலையில் சிக்கி மாயமாகினர். உடன் சென்ற பெற்றோர், அருகில் இருந்த மீனவர்களிடம் தகவல் தெரிவித்தனர். மீனவர்கள் உடனடியாக படகில் சென்று அவர்களை தேடினர்.

அப்போது அருள்ராஜை மீட்டு சிகிச்சைக்காக ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார். மற்ற 4 பேரையும் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கடலில் மாயமான 4 பேரின் கதி என்ன? என்பது தெரியவில்லை. இது குறித்து தகவலறிந்த தீயணைப்பு துறை உதவி மாவட்ட அலுவலர் லோகநாதன் தலைமையில் ராயபுரம், திருவொற்றியூர், மெரினா, உயர்நீதிமன்ற தீயணைப்பு நிலையங்களில் கடலில் பிரத்யேகமாக நீந்தக்கூடிய தீயணைப்பு வீரர்கள் 25 பேர் கொண்ட குழு படகுகள் மீட்பு கருவிகளுடன் அங்கு முகாமிட்டுள்ளனர்.

மாயமானவர்களை மீட்கப்படும் நிலையில் உடனடியாக முதலுதவி அளிக்க தண்டையார்பேட்டை, கொருக்குபேட்டை, காசிமேடு மீன்பிடி துறைமுகம் பகுதிகளில் 3 ஆம்புலன்ஸ்களில் 9 பேர் கொண்ட குழு தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

கடல் சீற்றமாக இருப்பதால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. சம்பவம் குறித்து காசிமேடு மீன்பிடி துறைமுகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story