பாகூர், காரைக்கால் பகுதியில் தீ விபத்தில் 4 வீடுகள் எரிந்து நாசம்


பாகூர், காரைக்கால் பகுதியில் தீ விபத்தில் 4 வீடுகள் எரிந்து நாசம்
x
தினத்தந்தி 16 Nov 2020 5:53 AM IST (Updated: 16 Nov 2020 5:53 AM IST)
t-max-icont-min-icon

பாகூர், காரைக்கால் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 வீடுகள் எரிந்து சேதமடைந்தது.

பாகூர், 

பாகூர் அடுத்துள்ள சோரியாங்குப்பம் தெற்கு தெருவை சேர்ந்தவர் சிவக்கொழுந்து (வயது 70). இவரது மகன்கள் அய்யனார் (40), சுகன் (35). இவர்கள் ஒரே வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். நேற்று முன்தினம் தீபாவளி பண்டிகையையொட்டி வீட்டில் விளக்கேற்றி வழிபட்டுள்ளனர்.

அப்போது வீட்டின் உட்புறம் உள்ள கூரை திடீரென தீப்பிடித்து எரியத்தொடங்கியது. இதனால், அதிர்ச்சியடைந்த சிவக்கொழுந்து மற்றும் அவரது மகன்களின் குடும்பத்தினர் அலறி அடித்தபடி வீட்டை விட்டு வெளியே ஓடிவந்தனர். பின்னர் அருகில் உள்ளவர்கள் உதவியுடன் தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் தீ மளமளவென மேலும் பரவியது.

இது பற்றிய தகவல் அறிந்த பாகூர் மற்றும் வில்லியனூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் 2 வண்டிகளில் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் வீட்டில் இருந்த டி.வி., பிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தது.

அலங்கார பொருட்கள் கருகியது

பாகூர் ஸ்ரீராம் நகரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரின் மாடி வீட்டின் மேல் தளத்தில் கூரை வீடு உள்ளது. இதில் பல்வேறு நிகழ்ச்சிக் கான அலங்கார பொருட்கள் வைத்திருந்தார். இவர் வீட்டுக்கு அருகில் உள்ள அரசு பள்ளி மைதானத்தில் தீபாவளிப் பண்டிகையையொட்டி சிலர் பட்டாசு வெடித்து கொண்டாடினர். இதில் ராக்கெட் பட்டாசு வெடித்த போது அதன் தீப்பொறி பறந்து கிருஷ்ணமூர்த்தியின் கூரை வீட்டின் மீது விழுந்து பற்றி எரிந்தது.

இது பற்றிய தகவல் அறிந்த உடன் பாகூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இருப்பினும் அங்கு வைக்கப்பட்டிருந்த அலங்கார பொருட்கள் எரிந்து கருகியது.

காரைக்கால்

காரைக்கால் தலத்தெரு பகுதியில் தீபாவளி பண்டிகையையொட்டி சிறுவர்கள், இளைஞர்கள் பட்டாசு வெடித்தனர். இதில் பட்டாசு வெடித்து சிதறியதில் அந்த பகுதியை சேர்ந்த பாவாடைசாமி என்பவரின் குடிசை வீட்டின் மீது தீப்பொறி விழுந்தது. சிறிது நேரத்தில் வீடு முழுவதும் எரிந்து நாசமானது. வீட்டில் இருந்த பொருட்கள் சேதமடைந்தது.

இதேபோல் திரு-பட்டினம் அருகே வடகட்டளை கிராமத்தைச் சேர்ந்த பாலசந்தர் என்பவர் மாடியில் அமைத்திருந்த குடிசை வீட்டின் மீது பட்டாசு துகள்கள் விழுந்ததில் குடிசை வீடு எரிந்து சாம்பலானது. இதில் வீட்டில் இருந்த பொருட்கள் கருகின. இந்த தீ விபத்து குறித்து காரைக்கால் நகர மற்றும் திரு-பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அ.ம.மு.க. நிவாரண உதவி

சோரியாங்குப்பத்தில் ஏற்பட்ட தீ விபத்து பற்றி தகவல் அறிந்த அ.ம.மு.க. மாநில செயலாளர் வேல்முருகன், பாதிக்கப்பட்ட சிவக்கொழுந்து மற்றும் அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் அரிசி, காய்கறி உள்ளிட்ட நிவாரண பொருட்கள் வழங்கி வீடுகளை சரி செய்வதற்கு தேவையான நிதி உதவியும் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் மணவழகன், சந்துரு, சிவராமன், பசுபதி, சுப்புராயன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Next Story