புதுவையில் பயங்கரம்: தொழிலாளி சரமாரியாக வெட்டிக்கொலை மர்ம நபர்களுக்கு வலைவீச்சு


புதுவையில் பயங்கரம்: தொழிலாளி சரமாரியாக வெட்டிக்கொலை மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 16 Nov 2020 12:42 AM GMT (Updated: 16 Nov 2020 12:42 AM GMT)

புதுவை மேட்டுப்பாளையத்தில் நேற்று இரவு தொழிலாளியை வெட்டி கொலை செய்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

புதுச்சேரி, 

புதுச்சேரி முத்திரையர் பாளையம் காந்திதிருநல்லூர் பிள்ளையார்கோவில் வீதியை சேர்ந்தவர் அஜித் என்கிற கட்ட அஜித் (வயது 22). பெயிண்டர். இவரது நண்பர் பன்னீர் விஜி என்பவர் விபத்தில் இறந்து விட்டார். இவரது இறுதிச்சடங்கு நேற்று மாலையில் மேட்டுப்பாளையத்தை அடுத்த சாணரப்பேட்டை சுடுகாட்டில் நடந்தது. இதில் அஜித் மற்றும் அவரது நண்பர்கள் கலந்துகொண்டனர்.

இறுதிச்சடங்கு முடிந்த பின்னர் நண்பன் இறந்து துக்கத்தில் அஜித் மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் நேற்று இரவு மேட்டுப்பாளையம் மதுக்கடைக்கு சென்று மதுபாட்டில்கள் வாங்கினர். பின்னர் சாணரப்பேட்டை சுடுகாட்டிற்கு செல்லும் வழியில் ஓரமாக நின்று மது குடித்துக்கொண்டு இருந்தனர்.

வெட்டினர்

அப்போது 4 பேர் கொண்ட கும்பல் 2 மோட்டார் சைக்கிளில் கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் அங்கு வந்தனர். அவர்கள் அஜித்திடம் ‘நீங்கள் ஏன் இங்கு நிற்கின்றீர்கள் என்று கேட்டனர். இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த எதிர்தரப்பினர் திடீரென அஜித்தை சுற்றி வளைத்து சரமாரியாக கத்தி, அரிவாளால் வெட்டினர்.

இதில் அவரது தலை, கழுத்தில் வெட்டு விழுந்தது. அஜித் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். இதனை பார்த்தவுடன் அவரது நண்பர்கள் 3 பேரும் அங்கிருந்து அலறி அடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றது.

விசாரணை

இது பற்றிய தகவல் அறிந்த மேட்டுப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் பிரியா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அஜித்தை கொலை செய்தது யார்? எதற்காக கொலை செய்தனர்? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து குற்றவாளிகளை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

Next Story