கோவையில் பயங்கரம்: ரவுடி ஓடஓட விரட்டி குத்திக்கொலை 2 பேர் கைது


கோவையில் பயங்கரம்: ரவுடி ஓடஓட விரட்டி குத்திக்கொலை 2 பேர் கைது
x
தினத்தந்தி 16 Nov 2020 9:38 AM IST (Updated: 16 Nov 2020 9:38 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் ரவுடி ஓடஓட விரட்டி கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது.

கோவை,

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜ் நகரை சேர்ந்தவர் ராஜ். இவருடைய மகன் ஜனார்த்தனன் (வயது 23). இவர் மீது கோவை போலீசில் 6 வழக்குகள் உள்ளன. எனவே அவர் ரவுடி பட்டியலிலும் இருந்தார். அவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் ஏற்கனவே முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. 2 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த ரஞ்சித்குமார், வினோத்குமார் ஆகியோருடன் ஜனார்த்தனனுக்கு தகராறு ஏற்பட்டது. இதில் அரிவாளால் வெட்டப்பட்ட ஜனார்த்தனன் சிகிச்சைக்கு பிறகு குணமடைந்தார். இதையடுத்து ஜனார்த்தனனின் தந்தை ராஜ், காமராஜபுரத்தில் உள்ள வீட்டை காலி செய்து விட்டு துடியலூர் பகுதியில் குடியேறினார். இந்த நிலையில் காமராஜர் நகரில் உள்ள நண்பர்களுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாட ஜனார்த்தனன் முடிவு செய்தார். அதன்படி அந்த பகுதியில் அவர் நின்று கொண்டு இருந்த போது நள்ளிரவு ஒரு மணி அளவில் இரு சக்கர வாகனத்தில் 3 பேர் வந்தனர். அவர்கள் திடீரென்று ஜனார்த்தனனை சுற்றி வளைத்தனர்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஜனார்த்தனன் அவர்களிடம் இருந்து தப்பித்து வேகமாக ஓடினார். ஆனால் அவர்கள் 3 பேரும், ஜனார்த்தனனை ஓடஓட விரட்டி சென்று மடக்கி பிடித்து கத்தியால் சரமாரியாக குத்தினார்கள். இதில் படுகாயம் அடைந்த அவர் ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து அந்த 3 பேரும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இது குறித்த புகாரின் பேரில் ஆர்.எஸ்.புரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஜனார்த்தனனின் உடலை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதில், பெயிண்டர் மற்றும் மேடை அலங்கார வேலை செய்யும் மாரி, ராஜேஷ், குணா ஆகியோரை ஜனார்த்தனன் அடிக்கடி மிரட்டி பணம் கேட்டு வந்துள்ளார். இதனால் அவர்கள் 3 பேரும் ஜனார்த்தனனை கொலை செய்ய திட்டமிட்டு, ஓடஓட விரட்டி குத்திக்கொலை செய்தது தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து குணா, ராஜேஷ் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மாரி என்பவர் தலைமறைவாக உள்ளார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். ரவுடி, ஓட, ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story