மேல்மலையனூர் அருகே சொத்து தகராறில் தாய் அடித்துக்கொலை மகன் கைது


மேல்மலையனூர் அருகே சொத்து தகராறில் தாய் அடித்துக்கொலை மகன் கைது
x
தினத்தந்தி 16 Nov 2020 9:59 AM IST (Updated: 16 Nov 2020 9:59 AM IST)
t-max-icont-min-icon

மேல்மலையனூர் அருகே சொத்து தகராறில் தாயை அடித்துக்கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.

மேல்மலையனூர், 

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே உள்ள தாரமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன்(வயது 72). விவசாயி. இவருடைய மகன் அயோத்தி(36). சென்னையில் கூலி வேலை செய்து வந்தார். தீபாவளி பண்டிகையை கொண்டாட அயோத்தி தனது சொந்த ஊருக்கு வந்திருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தனது தாய், சக்குபாயிடம் தனக்கு சேரவேண்டிய சொத்தை பிரித்து தருமாறு அயோத்தி கேட்டுள்ளார். இதற்கு அவரது தாய் மறுத்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அயோத்தி அருகில் இருந்த உருட்டு கட்டை மற்றும் செங்கல்லை எடுத்து சக்குபாயின் தலையில் அடித்துள்ளார். படுகாயமடைந்த சக்குபாயை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் சக்குபாய் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுபற்றி அறிந்த செஞ்சி துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன், அவலூர்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அயோத்தியை கைது செய்தனர். சொத்துக்காக பெற்ற தாயை மகனே அடித்துக்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story