திருப்பத்தூர் போலீஸ் சூப்பிரண்டிடம் மனு கொடுத்த 2 நாட்களில், பாஸ்போர்ட் வீடு தேடி வந்தது - நன்றி சொல்ல வந்த சிறுமியை தனது இருக்கையில் அமரவைத்து ஐ.பி.எஸ். ஆக வாழ்த்து


திருப்பத்தூர் போலீஸ் சூப்பிரண்டிடம் மனு கொடுத்த 2 நாட்களில், பாஸ்போர்ட் வீடு தேடி வந்தது - நன்றி சொல்ல வந்த சிறுமியை தனது இருக்கையில் அமரவைத்து ஐ.பி.எஸ். ஆக வாழ்த்து
x
தினத்தந்தி 16 Nov 2020 11:19 AM IST (Updated: 16 Nov 2020 11:19 AM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் மனுகொடுத்த சிறுமிக்கு 2 நாட்களில் பாஸ்போர்ட் வீடுதேடி வந்தது. இதற்காக நன்றி சொல்ல சென்ற சிறுமியை, தனது இருக்கையில் அமரவைத்து ஐ.பி.எஸ். ஆக வாழ்த்து தெரிவித்தார்.

திருப்பத்தூர்,

ஜோலார்பேட்டை, வாணியம்பாடி சாலையில் வசிப்பவர் ராஜி (வயது 36). இவருடைய மனைவி சரண்யா (30). இவர்களுடைய மகள் மகித்தா (7). ராஜிக்கு இவருக்கு கடந்த ஆண்டு துபாயில் மணிபால் யூனிவர்சிட்டியில் பேராசிரியராக வேலை கிடைத்தது. இதனால் அவர் தனது மனைவி சரண்யாவுடன் துபாய்க்கு சென்றார். மகள் மகித்தா தாத்தா வீட்டில் தங்கி படித்து வருகிறார்.

கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் துபாயிலிருந்து சரண்யா சொந்த ஊருக்கு வந்திருந்தார். இந்த நிலையில் அவரது மகள் மகித்தா தனது தந்தையிடம் செல்ல வேண்டுமென தாத்தா ஏலகிரிசெல்வத்திடம் நச்சரித்துள்ளார். அதற்கு அவர் தற்போது கொரோனா உள்ளதால் செல்ல முடியாது எனக் கூறி வந்துள்ளார்.

தற்போது கொரோனா தளர்வு காரணமாக சரண்யா மற்றும் மகித்தா இருவரும் துபாய் செல்ல ஆசைப்பட்டனர். இதற்காக மகித்தாவுக்கு பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்தும் பாஸ்போர்ட் கிடைக்கவில்லை. இதனால் திங்கட்கிழமை நடந்த குறை தீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமாரிடம், மகித்தா மனு அளித்துள்ளார். உடனடியாக பாஸ்போர்ட் கிடைக்க ஏற்பாடு செய்வதாக அவர் கூறி உள்ளார். அதன்படி மனுகொடுத்த 2 நாட்களில் மகித்தாவுக்கு அவரது வீட்டுக்கே பாஸ்போர்ட் வந்துள்ளது. இதனால் இன்ப அதிர்ச்சி அடைந்த மகித்தா, போலீஸ் சூப்பிரண்டுக்கு நன்றி தெரிவிப்பதற்காக தனது தாத்தா ஏலகிரிசெல்வத்துடன், திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்தார். அங்கு வந்து போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமாருக்கு நன்றி தெரிவித்தார்.

அப்போது படித்து என்ன ஆகப் போகிறாய் என்று சிறுமியிடம் கேட்டபோது, உங்களைப்போன்று போலீஸ் சூப்பிரண்டு ஆக வேண்டும், அதற்காக ஐ.பி.எஸ். படிப்பேன் எனக்கூறினார். உடனே அவரை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், தனது இருக்கையில் அமர வைத்து ஐ.பி.எஸ். ஆக வேண்டுமென வாழ்த்து தெரிவித்தார்.


Next Story