பெரம்பலூர் மாவட்டத்தில் கோவில்களில் குருப்பெயர்ச்சி விழா
பெரம்பலூர் மாவட்டத்தில் கோவில்களில் குருப் பெயர்ச்சி விழா நடைபெற்றது.
பெரம்பலூர்,
நவ கிரகங்களில் ஒருவரான குரு பகவான் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு நேற்று இரவு பெயர்ச்சி அடைந்தார். இதை முன்னிட்டு பெரம்பலூரில் உள்ள புகழ்பெற்ற பிரம்மபுரீஸ்வரர் உடனுறை அகிலாண்டேஸ்வரி கோவிலில் குருப்பெயர்ச்சி விழா நடைபெற்றது. இதையொட்டி கோவிலில் எழுந்தருளி உள்ள தட்சிணாமூர்த்திக்கு நேற்று இரவு விநாயகர் பூஜை, அனுக்கை, கும்பபூஜை, திரவியஹோமம், மூலமந்திர ஜபம், திரவியஹோமம், பூர்ணாகுதி, தீபாராதனையும், அதைத்தொடர்ந்து தட்சிணாமூர்த்திக்கு மகா அபிஷேகமும், கலசதீர்த்த அபிசேகமும் நடந்தது. பின்னர் வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு மகாதீபாராதனை நடந்தது. ஹோம பூஜைகளை திருச்செங்கோடு சுவாமிநாத சிவாச்சாரியார் குழுவினர் நடத்தினர்.
கொரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. விழாவிற்கான ஏற்பாடுகளை தர்மபரிபாலன சங்கம் மற்றும் கோவில் நிர்வாகத்தினர், திருக்கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
இதேபோல் பெரம்பலூரில் தாலுகா அலுவலக சாலையில் அமைந்துள்ள கச்சேரி விநாயகர் கோவிலில் குருப்பெயர்ச்சியையொட்டி நேற்று இரவு நவகிரக சன்னதியில் குருபகவானுக்கு அபிஷேகமும், அர்ச்சனை வழிபாடும் நடந்தது. பூஜைகளை கோவில் அர்ச்சகர் சஞ்சீவி பிரசாத் மற்றும் சிவாச்சாரியார்கள் நடத்தி வைத்தனர். இதில் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
எளம்பலூர் சாலையில் உள்ள பாலமுருகன் கோவிலில் தட்சிணாமூர்த்திக்கு அபிஷேகங்களும், சந்தன காப்பும் நடந்தது. இதனைத்தொடர்ந்து கொண்டைக்கடலை மாலை மற்றும் மலர் மாலை அணிவிக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. பூஜைகளை கோவில் அர்ச்சகர் ரமேஷ் குருக்கள் நடத்தினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தட்சிணாமூர்த்தியை தரிசனம் செய்தனர்.
பெரம்பலூர் புறநகர் துறைமங்கலத்தில் உள்ள மீனாட்சி சமேத சொக்கநாதர் கோவிலில் குருப்பெயர்ச்சியை முன்னிட்டுறு தட்சிணாமூர்த்தி சன்னதியில் வாஸ்துசாந்தி, புண்ணியாக வாஜனம், கோ பூஜை, சிறப்பு யாகம் மற்றும் சிறப்பு பூஜைகள், மகா அபிஷேகம், மகாதீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பெரம்பலூரை அடுத்த குரும்பலூரில் உள்ள தர்மசம்வர்த்தினி சமேதபஞ்சநதீஸ்வரர் கோவிலில் தட்சிணாமூர்த்திக்கு பால், பழம், பன்னீர், இளநீர் மற்றும் வாசனை திரவியங்கள் உள்பட சோடச அபிஷேகங்களும், மகாதீபாராதனையும் நடந்தது. பூஜைகளை கோவில் அர்ச்சகர் சிவசுப்ரமணிய குருக்கள் மற்றும் சிவாச்சாரியார்கள் நடத்தினர். இதில் மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், விருச்சிகம், மகரம், கும்ப ராசி பக்தர்கள் கலந்து கொண்டு குருபகவானை தரிசனம் செய்து, பரிகாரம் செய்து கொண்டனர்.
வாலிகண்டபுரத்தில் வாலாம்பிகை சமேத வாலீஸ்வரர் கோவிலில் தட்சிணாமூர்த்தி சிலை மற்றும் நவக்கிரக சன்னதியில் குருபகவானுக்கு அபிஷேகங்களும், மகா தீபாராதனையும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தட்சிணாமூர்த்தியை வழிபட்டனர். மேலும் வெங்கனூர் விருத்தசலேஸ்வரர், செட்டிகுளம் ஏகாம்பரேஸ்வரர் கோவில், குன்னம் ஆதி கும்பேஸ்வரர் கோவில், எஸ்.ஆடுதுறையில் உள்ள குற்றம் பொறுத்த ஈஸ்வரர் (அபராத ரட்சகர்) கோவில், திருவாலந்துறை சிவன் கோவில் உள்ளிட்ட சிவன் கோவில்களில் தட்சிணாமூர்த்திக்கும், குருபகவானுக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன.
Related Tags :
Next Story