வால்பாறைக்கு நண்பர்களுடன் சுற்றுலா வந்த திருப்பூர் மாணவர் ஆற்றில் மூழ்கி பரிதாப சாவு
வால்பாறைக்கு நண்பர்களுடன் சுற்றுலா வந்த கல்லூரி மாணவர் கூழாங்கல் ஆற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
வால்பாறை,
திருப்பூர் மாவட்டம் சாமுண்டிபுரம் குமார்நகரை சேர்ந்தவர் ஹரிஷ் (வயது 21). இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் தீபாவளியையொட்டி ஹரிஷ் தனது நண்பர்கள் 7 பேருடன் கோவை மாவட்டத்தில் உள்ள வால்பாறைக்கு நேற்று முன்தினம் சுற்றுலா வந்தார்.
வால்பாறையில் பல்வேறு பகுதிகளை இவர்கள் சுற்றி பார்த்துள்ளனர். பின்னர் வால்பாறையின் முக்கிய சுற்றுலா தலமாக விளங்கும் கூழாங்கல் ஆற்றில் குளிப்பதற்கு முடிவு செய்தனர். பின்னர் ஆற்றில் இறங்கி அனைவரும் குளித்தனர். இவர்கள் குளித்த இடம் குளிப்பதற்கு தடை செய்யப்பட்டு பகுதி என்று தெரிகிறது. இதுகுறித்து அந்த பகுதியில் எச்சரிக்கை பலகையும் வைக்கப்பட்டிருந்தது. ஆனால் அதையும் மீறி அவர்கள் குளித்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஹரிஷ் திடீரென சுழலில் சிக்கி ஆற்று தண்ணீரில் மூழ்கினார். அவரை சக நண்பர்கள் மற்றும் அங்கிருந்தவர்கள் சிலர் மீட்க முயன்றனர். ஆனால் அவர்களால் ஹரிசை மீட்க முடியவில்லை. உடனடியாக இதுகுறித்து வால்பாறை போலீசார் மற்றும் தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து ஆற்றில் இறங்கி கல்லூரி மாணவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். இரவு நீண்ட நேரம் ஆனதாலும், போதிய வெளிச்சம் இல்லாததாலும் மீட்பு பணி கைவிடப்பட்டது. இதனைத்தொடர்ந்து நேற்று காலையில் மீண்டும் மீட்பு பணி தொடங்கியது.
அப்போது கல்லூரி மாணவர் பாறை இடுக்குகளில் சிக்கி உயிரிழந்தது தெரியவந்தது. மேலும் மாணவரின் உடல் பாறை இடுக்குகளில் சிக்கியிருந்ததால் உடலை மீட்கும் பணியில் தொய்வு ஏற்பட்டது.
இதையடுத்து பாறை இடுக்குகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடலை மீட்கும் பணியில் கைதேர்ந்தவரான வால்பாறை வாழைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த காளை என்ற சண்முகம் என்பவர் அழைக்கப்பட்டார். அவர் ஆற்றில் இறங்கி பாறை இடுக்குகளில் சிக்கியிருந்த ஹரிஷ் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தார்.
இதையடுத்து கல்லூரி மாணவர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், வால்பாறை கூழாங்கல் ஆற்றில் மூழ்கி 20-க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர். இதனால் தான் இந்த இடத்தில் குளிப்பதற்கு போலீசாரும் பொதுப்பணித்துறையினரும் தடைவிதித்து எச்சரிக்கை பலகை வைத்துள்ளனர். ஆனால் வால்பாறைக்கு வெளியூர்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் ஆபத்தை உணராமல் கூழாங்கல் ஆற்றில் தடை செய்யப்பட்ட பகுதிகளில் குளிக்கின்றனர். இதனால் அவர்கள் சுழலில் சிக்கி உயிரிழந்துவிடுகின்றனர். எனவே வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகள் தடை செய்யப்பட்ட பகுதிகளில் குளிப்பதை தவிர்க்க வேண்டும் என்றனர். தீபாவளி விடுமுறையையொட்டி அதிகப்படியானவர்களுக்கு இ-பாஸ் வழங்கப்பட்டுள்ளதால் நேற்று முதல் கூழாங்கல் ஆற்று பகுதியில் போலீசார் ஒருவர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டார்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், கூழாங்கல் ஆற்று பகுதியில் போலீஸ் பாதுகாப்பு கூண்டு அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படும். அப்போது தான் வெளியூர் சுற்றுலா பயணிகள் தடை செய்யப்பட்ட பகுதியில் குளிப்பதை தடுக்க முடியும். இதற்கு சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.
Related Tags :
Next Story