நெல்லையில் முருகன் கோவில்களில் கந்தசஷ்டி விழா தொடங்கியது


நெல்லையில் முருகன் கோவில்களில் கந்தசஷ்டி விழா தொடங்கியது
x
தினத்தந்தி 16 Nov 2020 10:42 PM IST (Updated: 16 Nov 2020 10:42 PM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் முருகன் கோவில்களில் கந்தசஷ்டி விழா நேற்று தொடங்கியது.

நெல்லை, 

நெல்லை சந்திப்பு குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா நேற்று காலையில் தொடங்கியது. இதையொட்டி சுவாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடந்தன. விழா நாட்களில் உள் திருவிழாவாக யாகசாலை பூஜை, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வருகிற 20-ந் தேதி மாலை 4.30 மணிக்கு நடக்கிறது.

கொரோனா ஊரடங்கை முன்னிட்டு கோவில் முன்பகுதியில் இந்த சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கிறது. 21-ந் தேதி காலை 8 மணிக்கு அம்பாள் தபசு காட்சியும், சுவாமி காட்சி கொடுத்தல் வைபவமும் கோவில் உள் பகுதியில் நடைபெறுகிறது. அன்று இரவு 7 மணிக்கு சுவாமி திருக்கல்யாண நிகழ்ச்சி நடக்கிறது.

நெல்லையப்பர் கோவில்

நெல்லையப்பர் கோவில் ஆறுமுகர் சன்னதியில் கந்த சஷ்டி விழா உள் விழாவாக சிறப்பு வழிபாட்டுடன் நேற்று காலை தொடங்கியது. இதைத் தொடர்ந்து தினமும் ஆறுமுகர் சன்னதியில் சிறப்பு ஹோமம், அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சூரசம்ஹாரம் வருகிற 20-ந் தேதி நடக்கிறது.

அதேபோல் பாளையஞ்சாலைகுமாரசாமி கோவில், வண்ணார்பேட்டை சுப்பிரமணியர் கோவில், சாலை சுப்பிரமணியர் கோவில், பாளையங்கோட்டை திரிபுராந்தீஸ்வரர் கோவிலில் உள்ள சுப்பிரமணியர் சன்னதி, மேலவாசல் சுப்பிரமணியர் கோவில், குறிச்சி சொக்கநாதர் கோவில் உள்ளிட்ட கோவில்களில் கந்தசஷ்டி விழா சிறப்பு வழிபாடுடன் நேற்று காலை தொடங்கியது. அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

Next Story