கரூர் மாவட்டத்தில் பலத்த மழை பொதுமக்கள்-விவசாயிகள் மகிழ்ச்சி


கரூர் மாவட்டத்தில் பலத்த மழை பொதுமக்கள்-விவசாயிகள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 17 Nov 2020 1:44 AM IST (Updated: 17 Nov 2020 1:44 AM IST)
t-max-icont-min-icon

கரூர் மாவட்டத்தில் பலத்த மழை பெய்ததால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கரூர், 

கரூர், தாந்தோணிமலை, வெங்கமேடு, பசுபதிபாளையம் பகுதிகளில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதனால் குளிர்ந்த சூழல் நிலவியது. இந்தநிலையில் நேற்று மாலை 5 மணியளவில் கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்ய தொடங்கியது. பின்னர் ஒரு மணி நேரம் இடைவிடாமல் கரூர், திருமாநிலையூர், தாந்தோணிமலை, பசுபதிபாளையம், வெங்கமேடு உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் 1 மணி நேரம் மழை கொட்டி தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது. மேற்கு பிரதட்சணம் ரோடு உள்ளிட்ட இடங்களில் மழைநீரில் வாகனங்கள் சிரமப்பட்டு சென்றதை காண முடிந்தது.

குளித்தலை

குளித்தலை நகரம் மற்றும் கிராம பகுதிகளில் நேற்று முன்தினம் மிதமான மழை அவ்வப்போது விட்டு விட்டு பெய்தது. பின்னர் மாலை சிறிது நேரம் தொடர்ந்து மிதமான மழை பெய்தது. இதனைத் தொடர்ந்து நேற்று காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது லேசான மழை பெய்தது. பின்னர் நேற்று மாலை குளித்தலை நகரம் மற்றும் கிராம பகுதிகளில் பெய்ய தொடங்கிய மழை இரவு வரை இடைவிடாமல் தொடர்ந்து பெய்துகொண்டிருந்தது. இதனால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது. தொடர்ந்து மழை பெய்ததால் சாலைகளில் பொதுமக்கள் நடமாட்டம் மிக குறைவாகவே இருந்தது. ஆங்காங்கே சாலைகள் மற்றும் தெருக்களில் தண்ணீர் தேங்கி நின்றது.

தோகைமலை-கிருஷ்ணராயபுரம்

தோகைமலை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகள் தரிசு நிலங்களில் கடலை, எள்ளு, கொள்ளு, துவரை, உளுந்து, தட்டைப் பயறு, பாசிப்பயறு போன்ற தானியங்கள் விவசாயம் செய்து உள்ளனர். தற்போது அவைகள் விளைந்து அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தன. மழை இல்லாமல் அறுவடை செய்வதற்கு விவசாயிகள் சிரமப்பட்டு வந்தனர். தற்போது தோகைமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. கிருஷ்ணராயபுரம், மாயனூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று 4 மணி முதல் பலத்த மழை கொட்டி தீர்த்தது.

நொய்யல்-வெள்ளியணை

நொய்யல், மரவாபாளையம், புங்கோடை, சேமங்கி, முத்தனூர், நடையனூர், கோம்புப்பாளையம், திருக்காடுதுறை, தவிட்டுப்பாளையம், பாலத்துறை, புகளூர், புன்னம்சத்திரம், நல்லி கோவில், குறுக்குச்சாலை, ஓலப்பாளையம், ஒரம்புப்பாளையம், குளத்துப்பாளையம், குந்தாணி பாளையம், வடுகப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை கன மழை பெய்தது. இதனால் வறண்ட கிணறுகளில் தண்ணீர் ஊற்று ஏற்பட்டு நீர்மட்டம் உயர்ந்துள்ளது. வெள்ளியணை, மணவாடி, ஜெகதாபி, உப்பிடமங்கலம், புலியூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று காலையில் இருந்தே மழை பெய்வதற்கான அறிகுறியுடன் வானில் மேகமூட்டம் காணப்பட்டது. இதையடுத்து மாலை சுமார் 5 மணி அளவில் பெய்ய தொடங்கிய மழை, காற்று, இடி, மின்னல் இல்லாமல் கன மழையாக பெய்தது. பின்னர் விட்டு, விட்டு தூரல் மழையாக இரவிலும் தொடர்ந்து பெய்து கொண்டிருந்தது.

வேலாயுதம்பாளையம்

வேலாயுதம்பாளையம் பகுதி கந்தம்பாளையம், காகிதபுரம், கூலகவுண்டனூர், புகளூர், தோட்டக்குறிச்சி, அய்யம்பாளையம், தளவாப்பாளையம், மண்மங்கலம் ஆகிய இடங்களில் காலை முதல் பகல் வரை குறைவான அளவு வெயில் அடித்தது. மாலை 5-30 முதல் சுமார் 2 மணி மணி நேரம் பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளில் மழைநீர் தேங்கி நின்றன. மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்துள்ளது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Next Story