திருவையாறு அருகே வணிக வரித்துறை அதிகாரி வீட்டில் 6 பவுன் நகை திருட்டு மர்ம நபர்களுக்கு வலைவீச்சு


திருவையாறு அருகே வணிக வரித்துறை அதிகாரி வீட்டில் 6 பவுன் நகை திருட்டு மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 16 Nov 2020 11:08 PM GMT (Updated: 16 Nov 2020 11:08 PM GMT)

திருவையாறு அருகே வணிகவரித் துறை அதிகாரி வீட்டில் 6 பவுன் நகை - பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

திருவையாறு, 

தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே உள்ள மணக்கரம்பை கும்பகோணம் மெயின்ரோடு அன்னை தெரசா நகரை சேர்ந்தவர் பாலாஜி (வயது39). திருச்சியில் வணிகவரித்துறையில் துணை அலுவலராக இவர் பணியாற்றி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவருக்கு குழந்தை பிறந்தது. இதனால் குழந்தையை பார்க்க கும்பகோணத்துக்கு கடந்த 14-ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு பாலாஜி சென்றார்.

நேற்றுமுன்தினம் பாலாஜி தனது வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் கதவுகள் திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டுக்குள் சென்று பார்த்தார். அப்போது வீட்டில் பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த 6 பவுன் நகை, ரூ.3500 திருட்டு போயிருந்தது தெரியவந்தது.

வழக்குப்பதிவு

இது குறித்து நடுக்காவேரி போலீஸ் நிலையத்துக்கு பாலாஜி தகவல் தெரிவித்தார். இதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். தஞ்சையிலிருந்து கைரேகை நிபுணர்கள் வந்து ரேகைகளை பதிவு செய்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸ் மோப்ப நாய் வீட்டில் இருந்து கும்பகோணம் சாலையில் 1 கிலோ மீட்டர் ஓடி ரவுண்டானா அருகே படுத்துக்கொண்டது. நகை- பணம் திருட்டுப்போனது குறித்து நடுக்காவேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

Next Story