குற்ற சம்பவங்களை குறைக்கும் வகையில் தஞ்சையில் போலீசார் கொடி அணிவகுப்பு


குற்ற சம்பவங்களை குறைக்கும் வகையில் தஞ்சையில் போலீசார் கொடி அணிவகுப்பு
x
தினத்தந்தி 16 Nov 2020 11:13 PM GMT (Updated: 16 Nov 2020 11:13 PM GMT)

குற்ற சம்பவங்களை குறைக்கும் வகையில் தஞ்சையில் போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர். இதனை டி.ஐ.ஜி. ரூபேஷ்குமார் மீனா தொடங்கி வைத்தார்.

தஞ்சாவூர்,

குற்ற சம்பவங்களை குறைக்கும் வகையிலும், கொள்ளை, கொலை, திருட்டு தொடர்பான அச்சம் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் குற்றவாளிகளை எச்சரிக்கும் வகையிலும் தஞ்சையில் போலீசார் நேற்று திடீர் அணிவகுப்பு நடத்தினர். தஞ்சை விளார் சாலையில் உள்ள வீரமாகாளியம்மன் கோவில் அருகே இருந்து கொடி அணிவகுப்பு தொடங்கியது.

இதனை தஞ்சை டி.ஐ.ஜி. ரூபேஷ்குமார் மீனா தொடங்கி வைத்தார். இதில் போலீஸ் சூப்பிரண்டு தேஷ்முக்சேகர் சஞ்சய், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் பாரதிராஜன், சீத்தாராமன் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், 150 போலீசார் இதில் கலந்து கொண்டனர்.

செயல்முறை விளக்கம்

இந்த கொடி அணிவகுப்பு தஞ்சை கல்லுக்குளத்தில் உள்ள செயின்ட் ஜோசப் பள்ளி வளாகத்தை அடைந்தது. அங்கு போலீசாருக்கு கலவரம், குற்ற சம்பவங்கள் நடைபெறும் போது எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்த செயல்முறை விளக்கத்தை போலீஸ் சூப்பிரண்டு தேஷ்முக்சேகர் சஞ்சய் அளித்தார். அப்போது திடீரென மழை பெய்தது. கொட்டும் மழையிலும் இந்த செயல்முறை விளக்கம் நடைபெற்றது.

பின்னர் தேஷ்முக்சேகர் சஞ்சய் நிருபர்களிடம் கூறுகையில், “தேர்தலின் போது பிரச்சினைக்குரிய இடங்களில் எவ்வாறு செயல்படுவது, குற்ற சம்பவங்களை குறைக்க எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்தும் இந்த கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டுள்ளது. கலவரம் நடைபெறும் போது அதனை எவ்வாறு கட்டுப்படுத்த வேண்டும். போலீசாருக்கும் பாதுகாப்பு முக்கியம். அவர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்தும் எடுத்துரைக்கப்பட்டுள்ளது”என்றார்.

பொதுமக்கள் ஆச்சரியம்

தேர்தல் நேரத்தில் கலவரத்தை கட்டுப்படுத்தும் வகையில் போலீசார் கொடி அணிவகுப்பு நடத்துவார்கள். இந்த நிலையில் தஞ்சையில் நேற்று குற்ற சம்பவங்களை குறைக்கும் வகையில் போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தியதை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

Next Story