பாகூர் பகுதியில் தொடர் மழை: நிரம்பி வழியும் ஏரிகளால் விவசாயிகள் மகிழ்ச்சி கொமந்தான்மேடு தரைப்பாலம் மூழ்கியது
பாகூர் பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் ஏரிகள் நிரம்பி வழிகின்றன. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
பாகூர்,
புதுவையில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. புதுவையின் நெற்களஞ்சியம் என்று அழைக்கப்படும் பாகூர் பகுதியில் கடந்த 4 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் ஒரே நாளில் 8 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. இந்த தொடர் மழையால் தாழ்வான பகுதியில் பல இடங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளன. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புதுச்சேரி-கடலூர் சாலையில் தேசிய நெடுஞ்சாலைத் துறையில் உள்ள வாய்க்கால் களில் ஆக்கிரமிப்பு மற்றும் பல இடங்களில் முறையாக தூர்வாரப்படாததால் தண்ணீர் தேங்கி நிற்கிறது. தூர்வாரப்பட்ட பல வாய்க்கால்களில் மீண்டும் செடிகள் வளர்ந்து அடர்ந்து காணப்படுகிறது.
8 ஏரிகள் நிரம்பின
தொடர் மழையால் பாகூர் பகுதியில் உள்ள 24 ஏரிகளில் உள்ள இருளன்சந்தை, சேலியமேடு, மணப்பட்டு, உச்சிமேடு, பரிக்கல்பட்டு, சித்தேரி, கரையாம்புத்தூர், பனையடிக்குப்பம் ஆகிய 8 ஏரிகள் நிரம்பி உள்ளன. அந்த பகுதியில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கொமந்தான்மேடு தடுப்பணையுடன் கூடிய தரைப்பாலத்தை நிரம்பி தண்ணீர் செல்கிறது. இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தின் 2-வது பெரிய ஏரியான பாகூர் ஏரியும், கிருமாம்பாக்கம் ஏரியும் தற்போது வேகமாக நிரம்பி வருகின்றன. இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஏரியை பாதுகாக்க குழு
பாகூர் பகுதிகளில் உள்ள ஏரி, வாய்க்கால்கள் பராமரித்து, பாதுகாக்க குழு அமைக்கப்பட்டு உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 2 ஆயிரம் மணல் மூட்டைகள், பொக்லைன் எந்திரம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக பாகூர் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
விவசாயிகள் ஏதேனும் புகார் இருந்தால் உடனடியாக பாகூரில் உள்ள நீர்ப்பாசன பிரிவு அலுவலகத்திற்கு அல்லது அதிகாரிகளுக்கு உடனுக்குடன் தகவல் தெரிவிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story