பள்ளிப்பட்டில் வெள்ளத்தில் மூழ்கிய தரைப்பாலங்கள் ஆற்றை கடக்க முடியாமல் பொதுமக்கள் தவிப்பு


பள்ளிப்பட்டில் வெள்ளத்தில் மூழ்கிய தரைப்பாலங்கள் ஆற்றை கடக்க முடியாமல் பொதுமக்கள் தவிப்பு
x
தினத்தந்தி 17 Nov 2020 5:32 AM IST (Updated: 17 Nov 2020 5:32 AM IST)
t-max-icont-min-icon

ஆந்திர மாநிலம் கிருஷ்ணாபுரம் அணை நீர் திறக்கப்பட்டதால் பள்ளிப்பட்டு அருகே கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் தரை பாலங்கள் தண்ணீரில் மூழ்கின.

பள்ளிப்பட்டு,

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே ஆந்திர மாநிலம் அம்மம்பள்ளி என்ற இடத்தில் கிருஷ்ணாபுரம் அணை உள்ளது. இந்த அணை உள்ள பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அணை நிரம்பி வழிகிறது. இதனால் அணையிலிருந்து குறிப்பிட்ட அளவு தண்ணீரை திறந்து விட ஆந்திர மாநில அதிகாரிகள் முடிவு செய்தனர்.

இந்த அணை நீர் திறக்கப்பட்டால் பள்ளிப்பட்டு கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும். இதனால் ஆற்றின் கரையோரம் உள்ள கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் ஆந்திரமாநில அதிகாரிகள் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு குறித்து தமிழக அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

இதைத்தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் கொசஸ்தலை ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படுவதால் கரையோர மக்கள் இரவு நேரத்தில் ஆற்றில் உள்ள தரை பாலங்களை கடக்க வேண்டாம் என்று எச்சரிக்கை செய்தி வெளியிட்டனர்.

தரைப்பாலங்கள் மூழ்கின

இதையடுத்து அப்பகுதிகளில் வருவாய்த்துறை அதிகாரிகளை பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்தனர். நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி அளவில் ஆந்திர மாநில அதிகாரிகள் கிருஷ்ணாபுரம் அணையில் இருந்து 11-வது முறையாக வினாடிக்கு 900 கன அடி தண்ணீரை திறந்து விட்டனர்.

இந்த தண்ணீர் அதிகாலை 4 மணிவரை கொசஸ்தலை ஆற்றில் பாய்ந்த நிலையில், வெள்ளம் பள்ளிப்பட்டு பகுதியை கடந்தது. அப்போது கீழ்கால்பட்டடை, சாமந்த வாடா, நெடியம் ஆகிய கிராமப்பகுதிகளில் கொசஸ்தலை ஆற்றில் உள்ள தரை பாலங்கள் முழங்கால் அளவு தண்ணீரில் மூழ்கின. இதனால் இந்த கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் ஆற்றைக் கடக்க முடியாமல் அவதிப்பட்டனர். பலர் ஆற்றில் ஓடும் வெள்ளத்தை காண கூட்டம் கூட்டமாக திரண்டு வந்து பார்த்து ரசித்தனர்.

Next Story