பிரசவித்த அடுத்த சிலமணி நேரத்தில் பெண் திடீர் சாவு: திருப்பத்தூர் போலீஸ் நிலையம், மருத்துவமனையை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம் - டாக்டர்கள், நர்சுகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை


பிரசவித்த அடுத்த சிலமணி நேரத்தில் பெண் திடீர் சாவு: திருப்பத்தூர் போலீஸ் நிலையம், மருத்துவமனையை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம் - டாக்டர்கள், நர்சுகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை
x
தினத்தந்தி 17 Nov 2020 4:00 AM IST (Updated: 17 Nov 2020 7:18 AM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் பிரசவித்த அடுத்த சில மணிநேரத்தில் பெண் திடீரென உயிரிழந்தார். டாக்டர்கள், நர்சுகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உறவினர்கள் தாலுகா போலீஸ் நிலையம், மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் தாலுகா மாடப்பள்ளி களரூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜீவா (வயது 30), சென்னையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவரின் மனைவி நந்தினி (25), அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்து வந்தார்.

இருவருக்கும் ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. நிறைமாத கர்ப்பிணியான நந்தினிக்கு நேற்று முன்தினம் திடீரெனப் பிரசவ வலி ஏற்பட்டது. அவரை, 108 ஆம்புலன்ஸ் மூலம் கதிரம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு நள்ளிரவு 1.30 மணிக்கு கொண்டு சென்றுள்ளனர். இங்கு, இரவு நேரத்தில் பிரசவம் பார்ப்பதில்லை எனக்கூறி திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நந்தினிக்கு நான்கு மணி நேரம் கழித்து பெண் குழந்தை பிறந்தது. அங்கிருந்த நர்சு ஒருவர், நந்தினிக்கு ஊசி போட வேண்டும், தனியார் மருந்துக்கடையில் ஊசி வாங்கி வரச்சொல்லி, அந்த ஊசியை அவருக்கு போட்டதும், அடுத்த சில மணிநேரத்திலேயே நந்தினி உயிரிழந்து விட்டதாகக் கூறப்படுகிறது.

நந்தினி உயிருடன் இருப்பதாகக் கூறி, அவரை மேல்சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டும் என டாக்டர்களும், நர்சுகளும் கூறினர். அதன்பேரில் மருத்துவமனையின் பின்பக்க வழியாக 108 ஆம்புலன்சை வரவழைத்து, அதில் நந்தினியை ஏற்றி வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி உள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், நந்தினி உயிரிழந்து 4 மணி நேரம் ஆகிறது எனத் தெரிவித்துள்ளனர். அவரின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதையறிந்த உறவினர்கள் சிலர் நேற்று காலை திருப்பத்தூர் தாலுகா போலீஸ் நிலையத்துக்கு வந்து, பிரசவித்த அடுத்த சில மணிநேரத்தில் உயிரிழந்த பெண், உயிருடன் இருப்பதாகக் கூறி, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த டாக்டர்கள், நர்சுகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி முற்றுகையிட்டனர்.

அங்கிருந்த போலீசார், அவர்களை சமரசம் செய்து அனுப்பினர். நந்தினியின் கணவர் ஜீவா, அவரின் உறவினர்கள் 100-க்கும் மேற்பட்டோர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு வந்து முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். அவர்களை, போலீசார் மற்றும் அதிகாரிகள் சமரசம் செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர். இந்தச் சம்பவம் திருப்பத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story