வத்திராயிருப்பு, ராஜபாளையத்தில் பலத்த மழை


வத்திராயிருப்பு, ராஜபாளையத்தில் பலத்த மழை
x
தினத்தந்தி 16 Nov 2020 9:45 PM GMT (Updated: 17 Nov 2020 2:39 AM GMT)

வத்திராயிருப்பு, ராஜபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

வத்திராயிருப்பு,

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான கான்சாபுரம், மகாராஜபுரம், தம்பிபட்டி, கோட்டையூர், சுந்தரபாண்டியம், அழகாபுரி ஆகிய பகுதிகளில் நேற்று காலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. காலை 10.30 மணி அளவில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து சாரல் மழை பெய்ய தொடங்கியது. இந்த சாரல் மழை சில மணி நேரத்தில் பலத்த மழையாக பெய்து சாலைகள் மற்றும் தெருக்களில் மழைநீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது.

பேரூராட்சி பகுதிகளில் கழிவுநீர் கால்வாய்கள் சரிவர தூர்வாரப்படாததால் ஆங்காங்கே அடைபட்டு மழைநீருடன் கழிவுநீரும் சாலையில் ஓடியது. இதில் பொதுமக்கள் நடந்து செல்வதற்கு மிகவும் சிரமப்பட்டனர். நேற்று காலை பெய்த மழையானது இரவு வரை நீடித்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த பலத்த மழையால் அத்திகோவில் ஆற்றுப்பகுதியில், சதுரகிரி, பிளவக்கல் பெரியாறு அணைக்கு வரக்கூடிய ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்து ஓடை பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள கண்மாய்களுக்கு நீர் வருவதால் கண்மாய்களின் நீர்மட்டமும் உயர்ந்துவருவதால் இந்தபகுதியில் நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேல் பரவலாக மழை பெய்தது. இதனால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நேற்று அதிகாலை 3 மணி முதல் பெய்ய தொடங்கிய மழை சுமார் 2 மணி நேரம் சாரல் மழை பெய்தது.பிற்பகல் வரை மேக மூட்டமாக காணப்பட்ட நிலையில் 2 மணி அளவில் கன மழை பெய்தது. இந்த மழை சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. நகர் பகுதி மட்டுமல்லாமல் சமுசிகாபுரம், அட்டைமில், சேத்தூர், முகவூர், புத்தூர், தளவாய்புரம், அய்யனாபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும் கன மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தொடர்ந்து மழைபெய்தால் இந்த ஆண்டு எதிர்பார்த்த அளவு விளைச்சல் இருக்கும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

தளவாய்புரம், சேத்தூர் சுற்றுவட்டார பகுதியில் நேற்று காலை முதல் வானம் மேக மூட்டமாக காட்சியளித்தது. பகல் 1 மணி அளவில் திடீரென பலத்த மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பின்னர் இரவு வரை மழை விட்டு விட்டு பெய்து கொண்டே இருந்தது. இந்த மழையினால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.

Next Story