பழனியில் பட்டப்பகலில் பயங்கரம்: விவசாயிகளை துப்பாக்கியால் சுட்ட தியேட்டர் அதிபர் - நிலப்பிரச்சினையில் விபரீதம்
பழனியில் நிலப்பிரச்சினை காரணமாக, விவசாயிகள் 2 பேரை தியேட்டர் அதிபர் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பழனி,
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள அக்கரைப்பட்டியை சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 60). விவசாயி. பழனி ரெயில்வே பீடர் ரோடு, அப்பர் தெருவை சேர்ந்தவர் நடராஜன் (80). தியேட்டர் அதிபர். இவர்களுக்கிடையே பழனி பீடர் ரோட்டில் உள்ள 12½ சென்ட் நிலம் தொடர்பாக பிரச்சினை இருந்து வருகிறது. இது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்தநிலையில் அந்த நிலத்தில் கட்டிடம் கட்டுவதற்கான முயற்சியில் இளங்கோவன் ஈடுபட்டார். இதற்காக அவரது தரப்பினர், அந்த நிலத்தை சுத்தப்படுத்தும் பணியில் நேற்று காலை 10.15 மணி அளவில் ஈடுபட்டனர்.
இந்த பணியில் இளங்கோவனின் மகன் மதுபிரகாஷ் மற்றும் அவருடைய உறவினர்களும், விவசாயிகளுமான பழனி கவுண்டன்குளம் ஜீவானந்தம் தெருவை சேர்ந்த பழனிசாமி (72), சத்திரப்பட்டி அருகே உள்ள ராமப்பட்டினம்புதூரை சேர்ந்த சுப்பிரமணி (57) உள்ளிட்டோர் ஈடுபட்டிருந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த நடராஜன், தனது துப்பாக்கியை இடுப்பில் மறைத்து வைத்தபடி அங்கு சென்றார். பின்னர் அங்கிருந்த இளங்கோவனின் உறவினர்களிடம், இது தொடர்பாக கேட்டார். அப்போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த நடராஜன், தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் திடீரென சுப்பிரமணியனையும், பழனிசாமியையும் அடுத்தடுத்து சுட்டார்.
துப்பாக்கி சூட்டில் பழனிசாமிக்கு வலதுபுற தொடையிலும், சுப்பிரமணிக்கு வயிற்று பகுதியிலும் குண்டு பாய்ந்தது. படுகாயம் அடைந்த 2 பேரும் சாலையில் மயங்கி விழுந்தனர். அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பழனிசாமி தொடையில் பாய்ந்த துப்பாக்கி குண்டை டாக்டர்கள் அகற்றினர். அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சுப்பிரமணிக்கு வயிற்று பகுதியில் துப்பாக்கி குண்டு பாய்ந்திருப்பதால், மேல் சிகிச்சைக் காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே சம்பவ இடத்தில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பழனி டவுன் போலீஸ் நிலையத்துக்கு வாலிபர் ஒருவருடன் மொபட்டில் நடராஜன் சென்றார். துப்பாக்கியுடன் அவர் வந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர், நடந்த சம்பவம் குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரிடம் தெரிவித்து துப்பாக்கியை ஒப்படைத்தார். அவரும் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார்.
இதனையடுத்து பழனி டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து இளங்கோவனின் மகன் மதுபிரகாஷ், போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் நடராஜன் மீது வழக்குப்பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்தனர்.
கைதான நடராஜன் மீது இந்திய தண்டனை சட்டம் 294 (பி) (ஆபாசமாக பேசி தகராறில் ஈடுபடுதல்), 307 (கொலை முயற்சி), இந்திய ஆயுத தடைச்சட்டம் 27 (1) துப்பாக்கியை தவறாக பயன்படுத்துதல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
துப்பாக்கிச்சூடு குறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் சரக போலீஸ் டி.ஐ.ஜி.முத்துசாமி பழனி விரைந்தார். பழனி அரசு மருத்துவமனைக்கு சென்ற அவர், துப்பாக்கிச்சூட்டில் காயம் அடைந்து சிகிச்சை பெற்ற 2 பேரிடமும் விசாரணை நடத்தினார். இதேபோல் கைதான நடராஜனிடமும் துப்பாக்கியால் சுட்டதற்கான காரணம் குறித்து கேட்டறிந்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நிலப்பிரச்சினை காரணமாக தியேட்டர் அதிபர் நடராஜன், 2 விவசாயிகள் மீது துப்பாக்கியால் சுட்டிருக்கிறார். அந்த துப்பாக்கிக்கு உரிமம் உள்ளது. இதில் காயமடைந்த சுப்பிரமணிக்கும், பழனிசாமிக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் சுப்பிரமணிக்கு துப்பாக்கி குண்டு எங்குள்ளது என்பதை எக்ஸ்ரே மூலம் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் அவரை மேல்சிகிச்சைக்காக மதுரைக்கு அனுப்பி உள்ளோம்.
பழனிசாமிக்கு துப்பாக்கி குண்டு அகற்றப்பட்டு விட்டது. அவர் தற்போது நன்றாக உள்ளார். இதுதொடர்பாக நடராஜனை கைது செய்திருக்கிறோம். இந்த சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிக்கு 2019-ம் ஆண்டு வரை உரிமம் உள்ளது. 2020-ம் ஆண்டிற்கான உரிமத்தை புதுப்பிக்க விண்ணப்பம் செய்துள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக அவருக்கு உரிமம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
பட்டப்பகலில் பழனியில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து தகவல் அறிந்த பொதுமக்கள் நடராஜனின் சினிமா தியேட்டர், அப்பர் தெரு பகுதிகளில் திரண்டு விசாரித்த வண்ணம் இருந்தனர். இதேபோல் அரசு மருத்துவமனை வளாகத்தில் பழனிசாமி மற்றும் சுப்பிரமணியின் உறவினர்கள் குவிந்தனர். தொடர்ந்து பழனியில் பரபரப்பும், பதற்றமும் நிலவுவதால் துணை போலீஸ் சூப்பிரண்டு சிவா மேற்பார்வையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story