தூத்துக்குடி மாநகரில் மழை வெள்ளம் பாதித்த இடங்களில் கலெக்டர் ஆய்வு


தூத்துக்குடி மாநகரில் மழை வெள்ளம் பாதித்த இடங்களில் கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 17 Nov 2020 10:49 PM IST (Updated: 17 Nov 2020 10:49 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாநகர பகுதிகளில் மழை வெள்ளம் பாதித்த இடங்களில் கலெக்டர் செந்தில்ராஜ் நேற்று ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று காலை முதல் பலத்த மழை பெய்தது. தொடர்ந்து பெய்த மழையால் மாநகரின் பல இடங்களில் மழைநீர் தேங்கியது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் மாநகர பகுதிகளில் ஆய்வு செய்தார்.

அவர் பக்கிள் ஓடை, திரேஸ்புரம், செல்வநாயகபுரம், தபால் தந்தி காலனி உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்தார். தண்ணீர் தேங்கி உள்ள பகுதிகளில் இருந்து மழைநீரை விரைந்து வெளியேற்ற அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

ஆய்வின் போது, மாநகராட்சி ஆணையாளர் ஜெயசீலன், கூடுதல் கலெக்டர் (வருவாய்) விஷ்ணுசந்திரன், உதவி கலெக்டர் சிம்ரான்ஜீத்சிங் கலோன், மாநகர நல அலுவலர் அருண்குமார் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

தொடர்ந்து கலெக்டர் செந்தில்ராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

36 இடங்களில் தண்ணீர் தேக்கம்

தூத்துக்குடி மாநகர பகுதிகளில் பலத்த மழை பெய்து உள்ளது. இதனால் எந்தெந்த பகுதிகளில் தண்ணீர் தேங்குகிறது என்று ஆய்வு செய்யப்பட்டது. அப்போது, மாநகரில் 36 இடங்களில் தண்ணீர் தேங்கி இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. அந்த பகுதிகளில் அனைத்து துறை அலுவலர்களும் இணைந்து தண்ணீரை வெளியேற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 40 மோட்டார்கள் மூலம் தண்ணீரை அகற்றும் பணி நடந்து வருகிறது. மேலும் 100 மோட்டார்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.

மருத்துவக்குழு தயார்

மழை வெள்ளத்தால் பாதிக்கப்படுபவர்களை தங்க வைப்பதற்காக 20 இடங்கள் தயார்நிலையில் உள்ளன. வெள்ள பாதிப்பு ஏற்பட்டால் மக்களை மீட்டு பாதுகாப்பாக தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மருத்துவக்குழுவினரும் தயார் நிலையில் உள்ளனர். மாநகருக்கு வெளியில் இருந்து வரும் தண்ணீர் ஊருக்குள் வரால் வெளியில் கொண்டு செல்வதற்கான பணிகளும் நடந்து வருகிறது.

பொதுமக்கள் மழை வெள்ளம் பாதிப்பு ஏற்பட்டால், உடனடியாக 24 மணி நேரமும் இயங்கக்கூடிய கட்டணம் இல்லா தொலைபேசி எண் 1077 தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். மக்கள் தண்ணீரை காய்ச்சி குடிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story