கிரிக்கெட் மைதான விவகாரம் கவர்னரை கண்டித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ. சாலை மறியல்
துத்திப்பட்டு கிரிக்கெட் மைதானம் மீது நடவடிக்கை எடுத்து வரும் கவர்னர் கிரண்பெடியை கண்டித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ. தீப்பாய்ந்தான் சாலைமறியலில் ஈடுபட்டார். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
புதுச்சேரி,
புதுவை மாநிலம் துத்திப்பட்டு கிராமத்தில் சீகெம் டெக்னாலஜிஸ் சார்பில் கிரிக்கெட் மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மைதானம் அரசு நிலங்கள் மற்றும் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக வந்த புகாரை தொடர்ந்து இதுபற்றி நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டருக்கு கவர்னர் கிரண்பெடி உத்தரவிட்டார்.
இதையடுத்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில் கிரிக்கெட் மைதானம் அரசு இடம் ஆக்கிரமிப்பில் இருப்பது தெரியவந்தது. வில்லியனூர் சப்-கலெக்டர் அஸ்வின் சந்துரு உத்தரவின்பேரில் பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, நில அளவைத்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் கிரிக்கெட் மைதானத்துக்கு சென்று ஆக்கிரமிப்புகளை அகற்ற முயன்றனர். இதற்கு கிரிக்கெட் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சாலைமறியல்
இந்த நிலையில் புதுவைக்கு சர்வதேச அங்கீகாரம், இளைஞர்கள் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க வாய்ப்பு, வேலைவாய்ப்பு ஆகியவற்றை பறிக்கும் வகையில் திட்டமிட்டு கவர்னர் கிரண்பெடி செயல்படுவதாக கூறி ஊசுடு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. தீப்பாய்ந்தான் தலைமையில் தொகுதி மக்கள் மற்றும் துத்திப்பட்டு கிராம பொதுமக்கள் பத்துக்கண்ணு சந்திப்பில் நேற்று காலை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தின்போது திடீரென்று தீப்பாய்ந்தான் எம்.எல்.ஏ. சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டார். அவருடன் கிராம மக்களும், இளைஞர்களும் போராட்டத்தில் குதித்தனர். உடனே பாதுகாப்புக்காக இருந்த சேதராப்பட்டு போலீசார் மறியலில் ஈடுபட்ட தீப்பாய்ந்தான் எம்.எல்.ஏ.விடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை தொடர்ந்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.
போக்குவரத்து பாதிப்பு
போராட்டத்தில் வட்டார காங்கிரஸ் தலைவர் அருணகிரி மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள், இளைஞர்கள், பொதுமக்கள் என திரளானவர்கள் கலந்துகொண்டு, கண்டன கோஷங்களை எழுப்பினர். இந்த மறியல் போராட்டத்தால் பத்துகண்ணு பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. அதனை போலீசார் சரிசெய்தனர்.
Related Tags :
Next Story