பழனியில் நிலத்தகராறில் துப்பாக்கியால் சுடப்பட்ட விவசாயி சாவு - தியேட்டர் அதிபர் மீது கொலை வழக்கு பதிவு
பழனியில், நிலத்தகராறில் துப்பாக்கியால் சுடப்பட்ட விவசாயி பரிதாபமாக இறந்தார். இதனால் தியேட்டர் அதிபர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.
பழனி,
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள அக்கரைப்பட்டியை சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 60). விவசாயி. பழனி ரெயில்வே பீடர் ரோடு, அப்பர் தெருவை சேர்ந்தவர் நடராஜன் (80). தியேட்டர் அதிபர். இவர்களுக்கிடையே பழனி பீடர் ரோட்டில் உள்ள 12½ சென்ட் நிலம் தொடர்பாக பிரச்சினை இருந்து வருகிறது. இது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்தநிலையில் அந்த நிலத்தை சுத்தப்படுத்தும் பணியில் நேற்று முன்தினம் இளங்கோவன் தரப்பினர் ஈடுபட்டனர். அப்போது அங்கு சென்ற நடராஜனுக்கும், இளங்கோவன் தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த நடராஜன் தான் வைத்திருந்த துப்பாக்கியால் இளங்கோவனின் உறவினர்களும், விவசாயிகளுமான பழனி கவுண்டன்குளம் ஜீவானந்தம் தெருவை சேர்ந்த பழனிசாமி (72), சத்திரப்பட்டி அருகே உள்ள ராமப்பட்டினம்புதூரை சேர்ந்த சுப்பிரமணி (57) ஆகியோரை சுட்டார்.
பழனிசாமிக்கு வலதுபுற தொடையிலும், சுப்பிரமணிக்கு வயிற்று பகுதியிலும் குண்டுகள் பாய்ந்தன. காயம் அடைந்த 2 பேரும், பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் பழனிசாமியின் தொடையில் பாய்ந்த துப்பாக்கி குண்டை மருத்துவ குழுவினர் அகற்றினர். அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அதேநேரத்தில் சுப்பிரமணிக்கு வயிற்று பகுதியில் துப்பாக்கி குண்டு பாய்ந்திருப்பதால், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நள்ளிரவு 2 மணி சுப்பிரமணி பரிதாபமாக இறந்தார்.
சுப்பிரமணியின் குடல் பகுதியில் குண்டு பாய்ந்ததால் அதிக அளவு ரத்தம் வெளியேறி, அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. இதனாலேயே அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக பழனி டவுன் போலீஸ் நிலையத்தில், இளங்கோவனின் மகன் மதுபிரகாஷ் புகார் அளித்தார். அதன்பேரில் நடராஜன் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்தனர். இதைத்தொடர்ந்து நடராஜனை, நிலக்கோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி 15 நாள் நீதிமன்ற காவலில் பழனி சிறையில் போலீசார் அடைத்தனர்.
இதற்கிடையே துப்பாக்கியால் சுடப்பட்ட சுப்பிரமணி இறந்து விட்டதால், நடராஜன் மீதான வழக்கு கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் சுப்பிரமணி இறந்த சம்பவம் பழனியில் சோகத்தை ஏற்பத்தியது.
Related Tags :
Next Story