நீலகிரியில் பலத்த மழை கடும் பனி மூட்டத்தால் வாகன ஓட்டிகள் அவதி


நீலகிரியில் பலத்த மழை கடும் பனி மூட்டத்தால் வாகன ஓட்டிகள் அவதி
x
தினத்தந்தி 18 Nov 2020 8:48 AM IST (Updated: 18 Nov 2020 8:48 AM IST)
t-max-icont-min-icon

நீலகிரியில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் கடும் பனிமூட்டம் ஏற்பட்டு உள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து உள்ளனர்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. குறிப்பாக ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கேத்தி உள்ளிட்ட பகுதிகளில் அதிக மழை பதிவாகி வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் ஊட்டி, குன்னூர், பர்லியார், கோடநாடு, கேத்தி, எடப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.

இதன் காரணமாக சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தொடர் மழையால் சாலையோரத்தில் உள்ள மண் ஈரப்பதமாக காணப்படுவதால் மரங்கள் விழும் அபாயம் உள்ளது. இரவில் குன்னூர்-கோத்தகிரி சாலையின் குறுக்கே மரம் ஒன்று முறிந்து விழுந்தது. தகவல் அறிந்த குன்னூர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர்.

ஊட்டி அருகே கேத்தியில் சேலாஸ் செல்லும் சாலையோரத்தில் தனியார் கல்லூரி தடுப்புச்சுவர் திடீரென இடிந்து விழுந்தது. நள்ளிரவு என்பதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. சாலையில் விழுந்து கிடந்த கற்கள் அகற்றப்பட்டன. மேலும் தடுப்புச்சுவர் அந்தரத்தில் தொங்கிக் கொண்டு இருக்கிறது. சாலையோரத்தில் பொதுமக்கள் நடந்து செல்வதால், விரிசல் ஏற்பட்ட தடுப்புச்சுவரை அப்புறப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.

கனமழை காரணமாக கோத்தகிரியில் ஒரு வீடு இடிந்து சேதம் அடைந்து உள்ளது. ஊட்டி அருகே கேத்தி பாலாடாவில் விளைநிலத்தில் மண் சரிவு ஏற்பட்டு இருக்கிறது. அங்கு படிமட்ட முறையில் விவசாயம் மேற்கொள்ளாததாலும், தொடர் மழையாலும் மண் சரிந்து உள்ளது.

ஊட்டி-குன்னூர் சாலை, ஊட்டி-மஞ்சூர் சாலை, ஊட்டி-கோத்தகிரி சாலையில் கடும் பனி மூட்டம் காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் தங்களுக்கு முன்னால் செல்லும் வாகனங்கள், எதிரே வரும் வாகனங்களை பார்த்து இயக்க முடியாமல் அவதி அடைந்தனர். விபத்து ஏற்படுவதை தவிர்க்க முகப்பு விளக்குகளை ஒளிர விட்டபடி செல்வதை காண முடிந்தது.

நீலகிரியில் நடப்பாண்டில் ஒரே நாளில் வடகிழக்கு பருவமழை அதிகமாக பெய்தது குறிப்பிடத்தக்கது. வருகிற நாட்களில் மழை அளவு அதிகரிக்கக் கூடும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பந்தலூர், கொளப்பள்ளி, அய்யன்கொல்லி உள்பட பல பகுதிகளில் மின்மாற்றிகள் பழுதடைந்தது. இதனால் பல கிராமங்கள் இருளில் மூக்கியது. தகவலறிந்த மின்வாரிய ஊழியர்கள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து நேற்று காலை 8 மணிக்கு மின்வினியோகம் வழங்கப்பட்டது.

மேலும் அய்யன்கொல்லி அருகே காரக்கொல்லி பகுதியில் விடிய விடிய பெய்த மழையில் பொதுமக்கள் வீடுகளுக்குள் சேறும் சகதியும் கலந்த தண்ணீர் புகுந்தது. இதனால் பொது மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி உறவினர்களின் வீடுகளில் தஞ்சம் புகுந்தனர்.

சம்பவம் அறிந்த சேரங்கோடு ஊராட்சி மன்ற தலைவர் லில்லிஎளியாஸ், துணை தலைவர் சந்திரபோஸ், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பிரகாஸ், கவுன்சிலர் வினோத்கண்ணா ஆகியோர் பார்வையிட்டனர். அப்போது மண்குவியலை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். வீடுகளின் அருகே தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது.

நீலகிரியில் வடகிழக்கு பருவமழையால் பாதிப்பு ஏற்படாத வகையில் துறை சார்ந்த அலுவலர்களை கொண்டு 42 குழுக்கள் அமைக்கப் பட்டு உள்ளன. இந்த குழுவினர் மழைநீர் செல்லக்கூடிய தாழ்வான பகுதிகளை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். அத்துடன் நிவாரண முகாம்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.

தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் மண் சரிவு ஏற்பட்டால் உடனுக்குடன் அகற்ற பொக்லைன் எந்திரங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது. மணல் மூட்டைகள் தயார் நிலையில் உள்ளது. இயற்கை பேரிடரை எதிர்கொள்ள நீலகிரியில் உள்ள தீயணைப்பு வீரர்கள் மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் உள்ள வீரர்கள் 50 பேர் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

நீலகிரி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் 24 மணி நேரத்தில் பதிவான மழையளவு (மில்லி மீட்டரில்) விவரம் வருமாறு:-

ஊட்டி -17.4, கிளன்மார்கன்-12, குந்தா-25, அவலாஞ்சி-13, எமரால்டு-18, கெத்தை-35, கிண்ணக்கொரை-22, குன்னூர்-35.5, கேத்தி-23, பர்லியார்-30, எடப்பள்ளி-55, உலிக்கல்-30, கோத்தகிரி-25, கோடநாடு-40, கீழ் கோத்தகிரி-27.4 உள்பட மொத்தம் 526.4 மழை பதிவாகி உள்ளது.

இதன் சராசரி 18.15 ஆகும். அதிகபட்சமாக எடப்பள்ளியில் 5 சென்டி மீட்டர் மழை பதிவாகி இருக்கிறது.

Next Story