தனியார் வங்கியில் 500 ரூபாய் கள்ளநோட்டுகளை டெபாசிட் செய்ய முயன்ற என்ஜினீயர் போலீசார் விசாரணை
கோவை அருகே தனியார் வங்கியில் 500 ரூபாய் கள்ளநோட்டுகளை டெபாசிட் செய்ய முயன்ற என்ஜினீயரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது.
வடவள்ளி,
நீலகிரி மாவட்டம் கப்பக்கொடை நாடு நஞ்சநாடு பகுதியை சேர்ந்தவர் ஹிந்தேஷ் ஆனந்த் (வயது 33). இவர் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். இவர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோவையை அடுத்த வடவள்ளி அருகே ஓணாம்பாளையத்தில் 15 சென்ட் நிலம் வாங்கினார்.
அந்த நிலத்தை பார்ப்பதற்காக அவர் நேற்று முன்தினம் கோவை வந்தார். அப்போது அவர் ஒரு பையில் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் பணம் வைத்து இருந்தார். அந்த பணத்தை தனது வங்கி கணக்கில் டெபாசிட் செய்வதற்காக வடவள்ளியில் உள்ள ஒரு தனியார் வங்கிக்கு சென்றார். அவரிடம் வங்கி ஊழியர்கள் ஏ.டி.எம். எந்திரத்தில் பணத்தை செலுத்துமாறு கூறி உள்ளனர்.
உடனே அவர் அங்குள்ள ஏ.டி.எம். எந்திரத்தில் தன்னிடம் இருந்த ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பிலான 500 ரூபாய் நோட்டுகளை செலுத்தினார். அதில் ஒரு லட்சம் ரூபாய் அவருடைய கணக்கில் வரவு ஆனது. ஆனால் ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள 500 ரூபாய் நோட்டுகள் 40-ஐ ஏ.டி.எம். எடுத்துக்கொள்ளாமல் வெளியே தள்ளியது. உடனே அவர் வங்கி காசாளரிடம் சென்று, தன்னிடம் உள்ள 500 ரூபாய் நோட்டுகளை ஏ.டி.எம். எந்திரம் ஏற்க வில்லை. அதை தனது கணக்கில் டெபாசிட் செய்ய உதவுமாறு கூறியுள்ளார்.
உடனே அவர், அந்த 500 ரூபாய் நோட்டுகளை, கருவியில் பரிசோதனை செய்தனர். இதில், அவை கள்ளநோட்டுகள் என்பது தெரியவந்தது. இது குறித்து வங்கி துணை மேலாளர் கோகுல்நாத் (25) கொடுத்த புகாரின் பேரில் வடவள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் வங்கிக்கு விரைந்து சென்றனர்.
அவர்கள், கள்ளநோட்டுகள் எப்படி? வந்தது என்பது குறித்து ஹிந்தேஷ் ஆனந்திடம் விசாரணை நடத்தினர். இதில், அவர் ஊட்டியை சேர்ந்த மதன்லால் என்பவரிடம் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் கடனாக வாங்கி வந்ததாக கூறினார். இதையடுத்து அவரிடம் இருந்து ரூ.20 ஆயிரம் மதிப்பிலான 500 ரூபாய் கள்ளநோட்டுகள் 40-ஐ போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதைத்தொடர்ந்து மதன்லாலிடம் விசாரணை நடத்துவதற்காக வடவள்ளி போலீசார் ஹிந்தேஷ் ஆனந்தை ஊட்டிக்கு அழைத்து சென்றனர். மதன்லாலிடம் விசாரணை நடத்தினால் தான் கள்ளநோட்டு எப்படி? வந்தது என்பது தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story