கோவையில் தொடர் மழை சாலையில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதி


கோவையில் தொடர் மழை சாலையில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதி
x
தினத்தந்தி 18 Nov 2020 9:34 AM IST (Updated: 18 Nov 2020 9:34 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் நேற்று தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் சாலைகளில் தேங்கிய தண்ணீரில் செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.

கோவை,

கோவையில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை தென்மேற்கு பருவமழை பெய்யும். அதேபோல் அக்டோபர் மாதம் தொடங்கி நவம்பர் மாதம் வரை வடகிழக்கு பருவமழை பெய்வது வழக்கம். கோவையில் நடப்பாண்டில் சராசரி அளவுக்கு அதிகமாக தென்மேற்கு பருவமழை பெய்தது. இந்த நிலையில் தற்போது கோவையில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது.

கோவையில் நேற்றுமுன்தினம் இரவு தொடங்கி மழை விட்டு விட்டு பெய்தது. நேற்று காலை முதல் மாலை வரை வெயில் அடிப்பதும் மழை பெய்வதுமாக இருந்தது. இதனால் கோவையின் முக்கிய இடங்களான அவினாசி ரோடு மேம்பாலம், லங்கா கார்னர் பாலம், ரெயில் நிலைய சாலை உள்ளிட்ட இடங்களில் மழைநீர் தேங்கியது. அவினாசி ரோடு மேம்பாலத்துக்கு கீழ் தண்ணீர் நிரம்பியதால் சிறிதுநேரம் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள வாழைக்காய் மண்டி, தேவாங்கர் பள்ளி மைதானத்தில் உள்ள தற்காலிக பூ மார்க்கெட், எம்.ஜி.ஆர். மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் மழைநீர் தேங்கி சேறும் சகதியாக காட்சி அளித்தது. இதனால் பொதுமக்கள், வியாபாரிகள் கடும் அவதி அடைந்தனர். கோவையில் நேற்று மாலை முதல் இரவு வரை தொடர்ந்து மழை பெய்தது. இடையிடையே பலத்த மழை பெய்ததால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகனங்களை ஓட்ட முடியாமல் வாகனஓட்டிகள் அவதிப்பட்டனர்.

கோவை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. ஆனால் கோவை குளங்களின் நீர்பிடிப்பு பகுதியான மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கோவை நகருக்குள் பெய்த அளவு மழை பெய்யவில்லை. இதன் காரணமாக கோவை குளங்களுக்கு நீர் ஆதாரமாக விளங்கும் நொய்யல் ஆற்றில் நீர்வரத்து குறைந்து காணப்பட்டது. இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது.

தென்மேற்கு பருவமழை பெய்த போதே கோவையின் புறநகரில் உள்ள புதுக்குளம், கோளராம்பதி குளம், நரசாம்பதி, கிருஷ்ணாம்பதி, ஆகிய குளங்கள் நிரம்பி விட்டன. பேரூர் பெரியகுளம், சொட்டையாண்டிகுட்டை, கங்கநாராயண சமுத்திரம், குனியமுத்தூர், குறிச்சி குளங்கள் 90 சதவீதம் நிரம்பி உள்ளன. நேற்று முன்தினம் இரவு முதல் பெய்து வரும் மழை காரணமாக கோவையை அடுத்த சித்திரைச்சாவடி தடுப்பணைக்கு வினாடிக்கு 150 கன அடியும், சித்திரைச்சாவடி வாய்க்காலில் 110 கனஅடி என மொத்தம் 260 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. குனியமுத்தூர் வாய்க்காலில் வினாடிக்கு 100 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

கோவை மாநகருக்குள் தொடர்ந்து மழை பெய்வதால் குளங்களுக்கு தண்ணீர் போதிய அளவில் வராது. ஆனால் சங்கனூர்பள்ளம் வழியாக சிங்காநல்லூர் குளத்துக்கு மழைநீர் செல்கிறது. இதனால் அந்த குளத்தின் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. கோவையில் விட்டு விட்டு பெய்து வரும் மழையால் இதுவரை எந்த பாதிப்பும் ஏற்பட வில்லை. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் மழை பெய்தால் தான் நொய்யல் ஆறு வழியாக கோவை குளங்களுக்கு நீர்வரத்து அதிகரிக்கும். தற்போது பெய்து வரும் மழையால் குளங்களுக்கு குறைந்த அளவில் தான் தண்ணீர் வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

துடியலூர் பகுதியில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் இங்குள்ள தடுப்பணைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. மேலும் மலையடிவார கிராமங்களான சின்னத்தடாகம், மாங்கரை, பெரியதடாகம், வரப்பாளையம், நஞ்சுண்டாபுரம், பன்னிமடை, கதிர்நாயக்கன்பாளையம், மாங்கரை.ஆனைக்கட்டி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் அங்குள்ள, கணுவாய் குளம், சோமையம்பாளையம் குளம் நஞ்சுண்டபுரம் குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் இப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

நேற்று காலை முதல் கவுண்டம்பாளையம், துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் விட்டுவிட்டு பரவலாக மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கினர். இதற்கிடையில் சின்னத்தடாகம் அருகே உள்ள காளையனூரில் பெய்தமழை காரணமாக சாலையோரத்தில் இருந்த மரம் வேரோடு கோவை தடாகம் சாலையில் சாய்ந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த நெடுஞ்சாலைத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மரக்கிளைகளை வெட்டி அகற்றினர். இதையடுத்து போக்குவரத்து சீரானது.

கோவையில் வடகிழக்கு பருவமழை அடுத்த 2 நாட்களுக்கு பெய்ய வாய்ப்பு உள்ளது. இது குறித்து கோவை வேளாண் பல்கலைக்கழக கால நிலை ஆராய்ச்சி மைய தலைவர் ராமநாதன் கூறுகையில், கோவையில் இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தின் பெரும்பாலான நாட்கள் வெயில் மட்டும் இருந்தது. நவம்பர் மாதம் தொடக்கம் முதல் பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இது இன்னும் சில நாட்களுக்கு நீடிக்க வாய்ப்பு உள்ளது. கடந்த ஜனவரி மாதம் தொடங்கி தற்போது வரை கோவை மாவட்டத்தில் மொத்தம் 550 மி.மீ. அளவுக்கு மழை பெய்து உள்ளது. இதனால் நீர்நிலைகளில் போதிய அளவு தண்ணீர் காணப்படுகிறது என்றார்.

கோவை மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்) விவரம் வருமாறு:-

அன்னூர்- 12, விமானநிலையம்- 34.2, மேட்டுப்பாளையம்-17, வால்பாறை பி.ஏ.பி.-3, வால்பாறை தாலுகா-2, சோலையாறு-15, ஆழியாறு-6.6, சூலூர்-38, கோவை தெற்கு-42, பெரியநாயக்கன்பாளையம்-17, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்-20.

Next Story