மரக்காணம் பகுதியில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கலெக்டர் ஆய்வு


மரக்காணம் பகுதியில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 18 Nov 2020 10:05 AM IST (Updated: 18 Nov 2020 10:05 AM IST)
t-max-icont-min-icon

மரக்காணம் பகுதியில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.

விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் தாலுகாவிற்குட்பட்ட கிராம பகுதிகளில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்வது குறித்து மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது ஓமிப்பேர் ஊராட்சியில் மழையின் காரணமாக ஓடை வாய்க்கால் வழியாக செல்லும் மழைநீரினால் பழுதடைந்த பாலத்தை கலெக்டர் அண்ணாதுரை பார்வையிட்டு அந்த பழுதை உடனடியாக சரிசெய்யும்படி சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

அதனை தொடர்ந்து நாகல்பாக்கம் ஊராட்சி ராயநல்லூர்- நகர் சாலையின் குறுக்கே அமைந்துள்ள தரைப்பாலத்தை கலெக்டர் பார்வையிட்டார். அப்போது அந்த தரைப்பாலத்தில் மழைநீர் செல்லாத வகையில் ஆக்கிரமிப்புகள் இருந்ததையும், முட்புதர்கள் சூழ்ந்திருந்ததையும் பார்வையிட்ட அவர் அந்த ஆக்கிரமிப்புகள் மற்றும் முட்புதர்களை உடனடியாக அகற்றி 50 மீட்டர் நீளத்திற்கு புதிய பாலம் அமைக்கும்படி அறிவுறுத்தினார்.

மேலும் கந்தாடு ஊராட்சி கூனிமேடு பகுதியில் சாலையின் குறுக்கே அமைந்துள்ள பாலத்தை பார்வையிட்ட கலெக்டர் அண்ணாதுரை, அந்த பாலத்தின் வழியாக தண்ணீர் செல்லாதவாறு தடுத்து நிற்கும் ஆக்கிரமிப்பு மற்றும் முட்புதர்களை அகற்ற விரைந்து நடவடிக்கை எடுக்கும்படி வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து, நகர் ஏரியிலிருந்து ஓங்கூர் மற்றும் நாகல்பாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளின் வழியாக மழைநீர் செல்லும் பாதைகளில் ஏதேனும் ஆக்கிரமிப்புகள் உள்ளதா? என்பதையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


Next Story