அரசுப்பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் கல் உடைக்கும் தொழிலாளியின் மகன் மருத்துவ படிப்புக்கு தேர்வு - “கிராமப்புற ஏழை மக்களுக்கு சேவை செய்வதே லட்சியம்” என்கிறார்
அரசு பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் பேரணாம்பட்டு பகுதியை சேர்ந்த கல்உடைக்கும் தொழிலாளியின் மகன் மருத்துவ படிப்புக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பேரணாம்பட்டு,
தமிழக அரசால் கொண்டு வரப்பட்ட அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்இடதுக்கீடு மூலம் பேரணாம்பட்டு அருகே உள்ள கவுராப்பேட்டை கிராமத்தை சேர்ந்த மாணவன் குணசேகரன் என்பவர், எம்.பி.பி.எஸ்.படிப்புக்கான தரவரிசை பட்டியலில் முதல் 10 இடங்களில் 4-வது இடத்தை பெற்று மருத்துவ படிப்பிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து மாணவர் குணசேகரன் கூறியதாவது:-
எனது தந்தை ராஜேந்திரன் கல் உடைக்கும் தொழிலாளி செய்து குடும்பத்தை காப்பாற்றி என்னையும், எனது சகோதரர், சகோதரியை படிக்க வைத்தார். தாய் பழனியம்மாள். ஆரம்ப கல்வியை அருகிலுள்ள சிந்தகணவாய் கிராமத்தில் உள்ள ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8-ம் வகுப்புவரை படித்தேன். பின்னர் டி.டி. மோட்டூர் அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை தமிழ் வழி கல்வியில் படித்தேனஇ. 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 500-க்கு 477 மதிப்பெண்களும், பிளஸ்-2 பொதுத் தேர்வில் 1200- க்கு 1,080 மதிப்பெண்களும் பெற்றேன். கடந்த 2018- ஆம் ஆண்டு அரசு பயிற்சி மையத்தில் சேர்ந்து 332 மதிப்பெண்கள் பெற்று தேர்வு பெறாததால் தொடர்ந்து தன்னம்பிக்கையுடன் விடா முயற்சியுடன் ராசிபுரத்தில் உள்ள நீட் தேர்வுக்கான பயிற்சி மையத்தில் சேர்ந்து படித்து 562 மதிப்பெண்கள் பெற்றுள்ளேன் .
நீட் தேர்வு பயிற்சி மையத்தில் சேருவதற்கு பயிற்சி கட்டணம் செலுத்த முன்னாள் எம்.எல்.ஏ. டாக்டர் பரந்தாமன் மற்றும் எனது பள்ளி ஆசிரியர் விஸ்வநாதன், கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் உதவி புரிந்துள்ளனர். மருத்துவராகி கிராமப்புறங்களில் ஏழை எளிய மக்களுக்கு மருத்துவ சேவை செய்வதே தனது லட்சியம். இவ்வாறு அவர் கூறினார். மாணவன் குணசேகரனுக்கு முன்னாள் எம்.எல்.ஏ. பரந்தாமன் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார்.
Related Tags :
Next Story