ஆவணங்கள் சரியாக இருந்தால் விண்ணப்பித்தவர்களுக்கு காலதாமதமின்றி சான்றிதழ் - கலெக்டர் மதுசூதன் ரெட்டி உத்தரவு
ஆவணங்கள் சரியாக இருந்தால் விண்ணப்பித்தவர்களுக்கு காலதாமதமின்றி சான்றிதழ் வழங்க வேண்டும் என்று சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி உத்தரவிட்டார்.
சிவகங்கை,
சிவகங்கை மாவட்டத்தில் வருவாய்த்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் லதா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல், வருவாய் கோட்டாட்சியர்கள் முத்துக்கழுவன்(சிவகங்கை), சுரேந்திரன்(தேவகோட்டை) ஊரக வளர்ச்சி முகமை பொறியாளர் முருகன் மற்றும் தாசில்தார்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலெக்டர் மதுசூதன் ரெட்டி பேசும்போது கூறியதாவது:-
வருவாய்த்துறையின் பணி பொதுமக்களின் அன்றாட தேவைக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அதற்கு ஏற்ப அலுவலா்கள் திட்டமிட்டு செயல்பட வேண்டும். தற்போது மழைக்காலம் என்பதால் கிராமங்கள் முதல் நகர் பகுதி வரை கிராம உதவியாளர் முதல் தாசில்தார் வரை களப்பணியில் இருந்து மக்களின் தேவைகளை உணர்ந்து செயல்பட வேண்டும்.மேலும் பொதுமக்கள் அத்தியாவசிய தேவைக்கு வருவாய்த்துறை தொடர்பான சான்றுகள் கேட்டு விண்ணப்பிக்கும்போது அதற்குரிய ஆவணங்கள் சரியாக இருக்கும்பட்சத்தில் உடனுக்குடன் சான்றுகளுக்கு ஒப்புதல் வழங்க வேண்டும். காலதாமதம் செய்யக்கூடாது. அதேபோல் சான்றுகள் வேண்டி விண்ணப்பித்தவர்களுக்கு ஆவணங்கள் விடுபட்டு இருந்தால் அதையும் கேட்டு பெற்று அவர்களுக்கும் தேவையான உதவிகள் செய்ய வேண்டும் என்றார்.
இதைதொடர்ந்து ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு அவர் பேசியதாவது, ஒவ்வொரு ஊராட்சியிலும் தூய்மை காலங்கள் முதல் ஊராட்சிப் பகுதியை தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும். கடந்த 8 மாதம் காலமாக கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வந்த நிலையில் தற்போது மழை காலம் தொடங்கி விட்டது. இதுபோன்ற காலகட்டத்தில் சுற்றுப்புறத் தூய்மை என்பது மிக முக்கியமான ஒன்றாகும்.
அதேபோல் பொதுமக்கள் வசிப்பிடங்கள் மற்றும் வீதிகளில் மழைநீர் தேங்காத வண்ணம் பார்த்துக் கொள்வதுடன் அவ்வப்போது சுகாதாரத்துறை பணியாளர்களுடன் ஒருங்கிணைந்து கிருமி நாசினிகள் தெளிக்க வேண்டும். ஊராட்சி செயலர் மூலம் தினந்தோறும் பொதுமக்களுக்கு வழங்கும் குடிநீர் தூய்மையாக வழங்கப்படுகிறதா என்று கண்காணிப்பதுடன் அவ்வப்போது நீர்த்தேக்க தொட்டிகளை குளோரினேசன் மூலம் சுத்தம் செய்ய வேண்டும். அதேபோல் சுகாதாரத்துறை பணியாளர்களும் களப்பணிகள் மேற்கொண்டு யாருக்கேனும் காய்ச்சல் வந்தால் அரசு மருத்துவமனைக்கு உடனடியாக செல்ல அறிவுறுத்த வேண்டும் என்றார்.
Related Tags :
Next Story