கோரிக்கைகளை வலியுறுத்தி சாலையோர வியாபாரிகள்-விற்பனையாளர்கள் கடையடைப்பு போராட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூரில் சாலையோர வியாபாரிகள்- விற்பனையாளர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர்,
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட சாலையோர வியாபாரிகள் மற்றும் விற்பனையாளர், தொழிலாளர்கள் சங்கத்தினர், நவம்பர் 17-ந் தேதி (நேற்று) கடையடைப்பு செய்து, பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள காந்தி சிலை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதாக ஏற்கனவே அறிவித்திருந்தனர். இதனால் நேற்று அந்தப்பகுதியில் பாதுகாப்பு பணியில் பெரம்பலூர் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்காக பெரம்பலூர் நகரை சேர்ந்த 404 சாலையோர வியாபாரிகள், விற்பனையாளர்கள் தங்களது கடைகளை அடைத்து விட்டு வந்திருந்தனர்.
இந்நிலையில் கோரிக்கைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த வருமாறு அவர்களுக்கு போலீசார் அழைப்பு விடுத்தனர். இதையடுத்து பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் பால்ராஜ் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில், நகராட்சி அதிகாரிகள், சங்கத்தின் மாவட்ட தலைவர் வரதராஜ், செயலாளர் ரெங்கராஜ், பொருளாளர் செல்லத்துரை, சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் துரைசாமி, தலைவர் அகஸ்டின், துணை செயலாளர் ரெங்கநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது சாலையோர வியாபாரிகள் மற்றும் விற்பனையாளர்களை தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாக்கும் நபர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களின் பிரச்சினைகளுக்காக போராடும் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கு கொலை மிரட்டல் விடும் நபர்கள் மீதும், அடியாட்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலையோர வியாபாரிகள் மற்றும் விற்பனையாளர்களின் டெண்டர் கமிட்டி கூட்டத்தை கூட்டி பாதுகாப்பு நடவடிக்கைகளை வழங்கிட வேண்டும். கொரோனாவினால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு வங்கி கடன் வழங்கிட வேண்டும். அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கிட வேண்டும். நலவாரிய பதிவில் உள்ள குளறுபடிகளை களைந்திட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
கோரிக்கைகள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார், நகராட்சி அதிகாரிகள் உறுதியளித்ததை தொடர்ந்து சங்கத்தினர் நேற்று நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்தனர். ஆனாலும் கோரிக்கைகள் தொடர்பாக ஒரு நாள் கடையடைப்பு போராட்டத்தில் மட்டும் சாலையோர வியாபாரிகள்- விற்பனையாளர்கள் ஈடுபட்டனர். வருகிற 26-ந் தேதி நடைபெறவுள்ள அகில இந்திய வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொள்வோம் என்று சங்கத்தினர் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story