காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டம்: 50 சதவீத நிலங்களை விவசாயிகள் தாமாக முன்வந்து ஒப்படைப்பு - இழப்பீடு அதிகமாக வழங்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்
காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்தில் புதுக்கோட்டையில் 50 சதவீத நிலங்களை விவசாயிகள் தாமாக முன்வந்து ஒப்படைத்துள்ளனர் எனவும், அவர்களுக்கு இழப்பீடு அதிகமாக வழங்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்ட மக்களின் 100 ஆண்டு கால கனவு திட்டமான காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு ரூ.7 ஆயிரத்து 677 கோடி மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் நிலம் கையகப்படுத்த ரூ.700 கோடி சட்டமன்ற கூட்டத்தொடரில் ஒதுக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டத்தில் 19 கிராமங்கள் வழியாக இந்த கால்வாய் வர உள்ளது.
விராலிமலை குன்னத்தூரில் தொடங்கி புதுக்கோட்டை கவிநாடு வெள்ளாறில் முடிவடைகிறது. இந்த கால்வாய் நீளம் 52 கிலோ மீட்டர் ஆகும். இந்த கால்வாய் மூலம் மாவட்டத்தில் 17 ஆயிரத்து 66 எக்டேர் நிலம் பயன்பெறக்கூடும். இந்த திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாலை நடைபெற்றது. கூட்டத்திற்கு சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கலெக்டர் உமாமகேஸ்வரி, வீட்டு வசதிவாரியத்தலைவர் வைரமுத்து மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டம் முடிந்ததும் அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
இந்த திட்டத்தில் கால்வாய் வெட்டுவதற்கு மாவட்டத்தில் 596 எக்டேர் நிலம் கையகப்படுத்த வேண்டி உள்ளது. இதில் 7 கிராமங்களில் 21 கிலோ மீட்டர் தூரத்திற்கு 185 எக்டேர் நிலம் கையகப்படுத்த முதல் அறிக்கை வெளியிடப்பட உள்ளது. இத்திட்ட பணிக்கு 50 சதவீத நிலங்களை விவசாயிகள் தாமாக முன்வந்து ஒப்படைத்துள்ளனர். அவர்களுக்கு இழப்பீடு அதிகபட்சமாக வழங்கப்படும். வருங்கால சந்ததியினருக்காக இத்திட்டத்திற்கு தங்களது நிலத்தை தாமாக முன்வந்து ஒப்படைத்த விவசாயிகளுக்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசு சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். ரூ.331 கோடிக்கு கால்வாய் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. வருகிற ஜனவரி மாதம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இத்திட்டத்திற்கு புதுக்கோட்டையில் அடிக்கல் நாட்ட உள்ளார்.
தமிழகத்தில் கொரோனாவின் பாதிப்பு 2 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. 1 சதவீதமாக குறைப்பதே அரசின் நோக்கம். உலக நாடுகளில் கொரோனா 2-வது அலைவீசுகிற நிலையில் தமிழகத்தில் தகுந்த முன்னெச்சரிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழகம் முன்மாதிரியாக உள்ளது. அடுத்து வருகிற 2 மாதங்கள் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story