மாவட்டத்தில் பலத்த மழை கொட்டித் தீர்த்தது சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி


மாவட்டத்தில் பலத்த மழை கொட்டித் தீர்த்தது சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி
x
தினத்தந்தி 18 Nov 2020 7:45 PM IST (Updated: 18 Nov 2020 7:31 PM IST)
t-max-icont-min-icon

கரூர் மாவட்டத்தில் நேற்று பலத்த மழை கொட்டித் தீர்த்தது. சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீரால் வாகன ஓட்டிகள்அவதிப்பட்டனர்.

கரூர்,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. அதேபோல, கரூர் மற்றும் மாவட்ட பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. நேற்றுமுன்தினம் மாலை மிதமான மழை பெய்தது. பின்னர் அவ்வப்போது தூறிக்கொண்டே இருந்தது. இந்நிலையில் கரூரில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது லேசான மழை பெய்தது. பின்னர் 3 மணி அளவில் கருமேகங்கள் சூழ்ந்து இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்ய தொடங்கியது. குறிப்பாக கரூர், திருமாநிலையூர், காந்தி கிராமம், தாந்தோன்றிமலை, பசுபதிபாளையம், வெங்கமேடு உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. கரூர் ராமகிருஷ்ணபுரம் மெயின்சாலையில் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளிலும் மழைநீர் புகுந்தது.

அதேபோல, சுங்ககேட் பஸ் நிறுத்தம் பகுதியிலும் மழைநீர் தேங்கி நின்றது. தாழ்வான பகுதிகளிலும் மழைநீர் புகுந்தது. மேலும் பசுபதிபாளையம் குகைவழிப்பாதை, குளத்துப்பாளையம் குகைவழிப்பாதை ஆகிய இடங்களிலும் மழைநீர் தேங்கி நின்றது. இதனால் அந்த வழியாக சென்றவர்கள் கடும் அவதியடைந்தனர்.

குளித்தலை பகுதியில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் அவ்வப்போது லேசான மழை பெய்தது. அதனைத்தொடர்ந்து மாலை இடியுடன் கூடிய மழை பெய்தது. இதனால், குளித்தலை தாசில்தார் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சாலையோரம் மழைநீர் தேங்கி நின்றது. இரவு வரை தொடர்ந்து மழை பெய்துகொண்டே இருந்தது. மழையின் காரணமாக குளித்தலை பகுதியில் மின்தடை ஏற்பட்டது. வேலாயுதம்பாளையம், கந்தம்பாளையம், கூலகவுண்டனூர், புகளூர், நாணப்பரப்பு, காகிதபுரம், மூலிமங்கலம், செக்குமேடு, தோட்டக்குறிச்சி, அய்யம்பாளையம், தளவாபாளையம், மண்மங்கலம் ஆகிய பகுதிகளில் லேசான மழை பெய்தது. பின்னர் பகல் 3.30 மணி அளவில் இடியுடன் சுமார் 1 மணி நேரம் கனமழை பெய்தது. இந்த மழையால் இப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மழையின் காரணமாக தோகைமலை பஸ் நிலையத்தின் முகப்பு வாசலில் மழைநீருடன் சாக்கடைநீர் கலந்து தேங்கி உள்ளது. இதனால், பஸ் நிலையத்திற்கு வந்தவர்கள் மிகவும் அவதிப்பட்டனர். ஆகவே, இப்பகுதியில் நோய்த் தொற்று பரவாமல் தடுக்கும் பொருட்டு ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பஸ் பயணிகள், அங்கு கடை அமைத்துள்ள வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். நொய்யல், மரவாபாளையம், புங்கோடை, சேமங்கி, குளத்துப்பாளையம், வேட்டமங்கலம், நத்தமேடு, குந்தாணி பாளையம், வடுகபட்டி, நல்லிக்கோவில், புன்னம்சத்திரம், பழமாபுரம், குட்டக்கடை, பசுபதிபாளையம், நடையனூர், கரைப்பாளையம், திருக்காடுதுறை, தவிட்டுப்பாளையம், கட்டிபாளையம், பாலத்துறை, நஞ்சை புகளூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று மதியம் முதல் தொடர்ந்து மழை பெய்தது. இதனால், கூலி வேலைக்கு சென்றவர்கள் பாதிக்கப்பட்டனர்.

சாலையோர வியாபாரிகள், வியாபாரம் செய்ய முடியாமல் தவித்தனர். தொடர் மழையின் காரணமாக கிராமப்புறங்களில் உள்ள கிணறுகள் நிரம்பி வருகின்றன.

க.பரமத்தி, முன்னூர், காருடையாம்பாளையம், பவித்திரம், ஆரியூர், எலவனூர் ஆகிய பகுதிகளில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது மதிய நேரத்தில் சாரல் மழை பெய்தது. மாலை 3 மணிக்கு மேல் விட்டு, விட்டு கனமழை பெய்தது.

கரூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் நேற்று காலை 8 மணி நிலவரப்படி பதிவான மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

கரூர்-41, அரவக்குறிச்சி-4.3, அணைப்பாளையம்-15, க.பரமத்தி-39, குளித்தலை-8, தோகைமலை-6, கே.ஆர்.புரம்-20.2, மாயனூர்-24, பஞ்சப்பட்டி-30.4, மைலம்பட்டி-5.

Next Story