முசிறியில் குளிக்க சென்றபோது பரிதாபம்: காவிரி ஆற்றில் மூழ்கி கல்லூரி உதவி பேராசிரியர்-மாணவன் பலி - 2 சிறுவர்களை தேடும் பணி தீவிரம்
முசிறியில் காவிரி ஆற்றில் குளிக்க சென்றபோது ஆற்றில் மூழ்கி கல்லூரி உதவி பேராசிரியர்-மாணவன் ஆகியோர் பலியானார்கள். 2 சிறுவர்களை தேடும்பணி தீவிரமாக நடந்து வருகிறது.
முசிறி,
கோவை மாவட்டம் மதுக்கரை அருகே நவக்கரை திருவள்ளுவர் வீதியை சேர்ந்த தமிழ்செல்வனின் மகன் சரவணகுமார் (வயது 31). கோவையில் உள்ள ஒரு தனியார் கலை அறிவியல் கல்லூரியில் உதவி பேராசிரியராக வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி தெய்வபிரியா (24). இவர்களுக்கு திருமணமாகி 4 மாதங்கள் தான் ஆகின்றன.
ஈரோட்டில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் தலைத்தீபாவளி கொண்டாடிய தெய்வபிரியா, தனது கணவருடன், திருச்சி மாவட்டம் முசிறியில் உள்ள தனது அத்தை ஜெயலட்சுமியின் வீட்டுக்கு வந்திருந்தார். மேலும் ஜெயலட்சுமியின் உறவினர்களான கரூர் ராமானுஜம் நகரை சேர்ந்த ரகுராமனின் மனைவி தனது மகன்கள் ரத்தீஷ் (12), மிதுனேஷ் (8) ஆகியோருடனும், முசிறியை சேர்ந்த மரகதம் தனது மகள் காவ்யதர்ஷினி, மகன் நிதிஷ்குமார்(15) ஆகியோருடனும் முசிறிக்கு வந்திருந்தனர்.
இந்த நிலையில் நேற்று மதியம் 12 மணிக்கு சரவணகுமார் மற்றும் மரகதம், காவ்யதர்ஷினி, நிதிஷ்குமார், ரத்தீஷ், மிதுனேஷ் உள்பட 9 பேர் முசிறி பரிசல் துறை ரோடு அழகுநாச்சியம்மன் கோவில் அருகில் காவிரி ஆற்றில் குளிக்க சென்றனர். தற்போது காவிரி ஆற்றில் நடுப்பகுதியில் தான் தண்ணீர் செல்கிறது. இதனால் ஆற்றுக்குள் இறங்கி அனைவரும் நடந்து சென்றனர்.
அங்கு தண்ணீர் சென்ற பகுதியில் சரவணகுமார், நிதிஷ்குமார், ரத்தீஷ், மிதுனேஷ் ஆகிய 4 பேரும் இறங்கி குளித்தனர். மற்றவர்கள் கரையில் துணி துவைத்துக்கொண்டிருந்தனர். அப்போது 4 பேரும் தண்ணீரில் திடீரென மூழ்கினார்கள். இதை பார்த்து உடன் வந்த உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து சத்தம்போட்டனர்.
அப்போது, அந்த பகுதியில் குளித்துக்கொண்டிருந்தவர்கள் ஆற்றுக்குள் இறங்கி சரவணகுமாரை மீட்டு சிகிச்சைக்காக முசிறி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதற்கிடையே தகவல் அறிந்த முசிறி தீயணைப்பு நிலைய வீரர்கள் நிலைய அதிகாரி முனியாண்டி தலைமையில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இதுபற்றி கேள்விப்பட்ட அந்த பகுதி பொதுமக்களும் அங்கு திரண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள், ஆற்றுக்குள் மிதவை உதவியுடன் இறங்கி 3 பேரையும் தேடினார்கள். சிறுவன் நிதீஷ்குமாரை அவர்கள் உயிருடன் மீட்டனர். மேலும் அண்ணன், தம்பிகளான சிறுவர்கள் ரத்தீஷ், மிதுனேஷ் ஆகியோரை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து ஈடுபட்டனர்.
அப்போது, மற்றொரு சிறுவனின் உடல் கிடைத்தது. இதனால் தீயணைப்பு வீரர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த சிறுவன் யார்? என்பது பற்றி விசாரணை நடத்தினர். அப்போது அவன் முசிறி கருமாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த அசோக்குமாரின் மகன் பார்த்தீபன் (12) என்பதும், 7-ம் வகுப்பு படித்து வந்த அவன், ரேஷன் கடைக்கு செல்வதாக கூறிவிட்டு ஆற்றில் குளிக்கச்சென்றபோது, நீரில் மூழ்கி பலியானதும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து, மீட்கப்பட்ட சரவணகுமார், பார்த்தீபனின் உடலை பிரேத பரிசோதனைக்காக போலீசார் முசிறி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். முசிறி பகுதியில் தொடர்ந்து விட்டு, விட்டு மழை பெய்து வருவதால் ஆற்றில் மூழ்கிய சிறுவர்கள் இருவரையும் மீட்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே தகவல் அறிந்த சரவணக்குமார் மற்றும் ஆற்றில் மூழ்கிய சிறுவர்களின் உறவினர்கள் சோகத்துடன் அங்கு வந்து நின்றிருந்தனர்.
மேலும் சம்பவ இடத்தினை திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) செந்தில்குமார் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். இந்த சம்பவம் குறித்து முசிறி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story