மனைவியை குடும்பம் நடத்த வருமாறு அழைத்தபோது தகராறு: கட்டிட தொழிலாளி அடித்துக்கொலை - மாமியார் உள்பட 4 பேர் கைது


மனைவியை குடும்பம் நடத்த வருமாறு அழைத்தபோது தகராறு: கட்டிட தொழிலாளி அடித்துக்கொலை - மாமியார் உள்பட 4 பேர் கைது
x
தினத்தந்தி 18 Nov 2020 4:00 PM GMT (Updated: 18 Nov 2020 4:01 PM GMT)

திருப்பூரில் மாமியார் வீட்டிற்கு சென்ற மனைவியை குடும்பம் நடத்த வருமாறு அழைத்தபோது ஏற்பட்ட தகராறில் கட்டிட தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக மனைவி, மாமியார் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

அனுப்பர்பாளையம்,

திருப்பூர் பி.என்.ரோடு கூத்தம்பாளையத்தை அடுத்த ஏ.பி. நகரை சேர்ந்தவர் காளி (வயது 23). கட்டிட தொழிலாளி. இவருக்கும் ஜனனி (19) என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பின்பு கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடந்த வாரம் மீண்டும் தகராறு ஏற்பட்டதை தொடர்ந்து ஜனனி கணவரிடம் கோபித்துக்கொண்டு அருகிலுள்ள தாய் ஜோதி வீட்டிற்கு சென்றுவிட்டார். இதையடுத்து தீபாவளிக்கு 2 நாளுக்கு முன்பு காளி மாமியார் வீட்டுக்கு சென்று ஜனனியை தீபாவளி கொண்டாட வீட்டுக்கு வருமாறு அழைத்துள்ளார்.

அப்போது அவருக்கும் ஜனனி குடும்பத்தினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஜனனியின் அண்ணன்களான மணிகண்டன் (27), பிரசாத் (25), ஜனனி, ஜோதி ஆகியோர் சேர்ந்து காளியை கட்டையால் கடுமையாக தாக்கினர். இதில் படுகாயமடைந்த காளி திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து திருமுருகன்பூண்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் காளி நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து போலீசார் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி காளியின் மனைவி ஜனனி, மாமியார் ஜோதி, மைத்துனர்கள் மணிகண்டன், பிரசாத் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் திருப்பூர் சுற்றுவட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story